சினிமா செய்திகள்

அழகின் அழகு + "||" + The beauty of beauty

அழகின் அழகு

அழகின் அழகு
தங்கள் அழகை ரசிக்கும் ரசிகைகள் பின்பற்றுவதற்கு வசதியாக, தங்களது அழகு ரகசியங்களை அந்த நடிகைகளே சொல்கிறார்கள்!
ழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெண்களிடம், ‘நீங்கள் யாரை போன்று அழகாக தோன்ற விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டால், பெரும்பாலானவர்கள் இந்தி நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், அனுஷ்கா சர்மா, ஆலியா பட் ஆகியோர்களை குறிப்பிடுகிறார்கள். அந்த நடிகைகள் போன்று தாங்களும் அழகில் ஜொலிக்க விரும்புகிறார்கள். தங்கள் அழகை ரசிக்கும் ரசிகைகள் பின்பற்றுவதற்கு வசதியாக, தங்களது அழகு ரகசியங்களை அந்த நடிகைகளே சொல்கிறார்கள்!

பிரியங்கா சோப்ரா:

இவரை நினைத்தாலே அழகான உதடுகள் நினைவில் வந்து நிற்கும். இவரது உதடுகளை ‘ஹாட் அன்ட் பியூட்டிபுள்’ என்று சக நடிகர்களே வர்ணிக்கிறார்கள். அந்த உதடு களுக்கு இவர் எப்படி கூடுதல் அழகு சேர்க் கிறார்? அதற்கு ரோஸ் வாட்டர், ரோஜா இதழ்கள், சர்க்கரை போன்றவைகளை பயன்படுத்துகிறார். இவைகளை தேவையான அளவு கலந்து குழைத்து, தனது இதழ்களில் பூசி மென்மையாக மசாஜ் செய்து மென்மேலும் அழகூட்டுகிறார். முகத்தை பளபளபாக்கிக்கொள்ள இவருக்கு தேங்காய் எண்ணெய் கைகொடுக்கிறது. அதை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து இளம்சூடான டவல் மூலம் ஒற்றி எடுக்கிறார்.

“சோப்பிற்கு பதிலாக கிரீக் யோகர்ட்டை பூசி குளித்தால் சருமம் மென்மையாகும். தலையில் தயிரை பூசிக்கொள்வது நல்லது. பூசிக்கொண்டால் பொடுகை போக்கலாம். கூந்தலும் ஜொலிப்பாக மாறும். கூந்தலை ஸ்டைலாக மாற்றவும் உதவும். சருமத்தை அழகாக்க எனக்காக அம்மா ஒரு விசேஷ ‘பேக்’ தயாரித்து தருகிறார். அதை பற்றி சொல் கிறேன்.

இரண்டு தேக்கரண்டி கோதுமை மாவு, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், நான்கு துளி எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டி தயிர், நான்கு சொட்டு ரோஸ் வாட்டர் ஆகியவைகளை குழைத்து முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் கழித்து விரலால் மெல்ல மசாஜ் செய்து நீக்கியபடி, கழுவிவிடலாம். இதில் எனது சரும அழகின் ரகசியம் அடங்கியிருக்கிறது” என்கிறார்.

இவர் உடற்பயிற்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் எப்போதும் தன்னோடு வைத்திருக்கும் பையில் ‘ஸ்கிப் ரோப்’ வைத்திருக்கிறார். அதை வைத்து பயிற்சி மேற்கொள்கிறார். இதயத்திற்கு வலு சேர்க்கும் ‘கார்டியோ ஒர்க் அவுட்’டும் செய்கிறார். இடுப்பு அளவை கட்டுக்குள்வைத்துக்கொள்ளும் விசேஷ உடற்பயிற்சி களை செய்வதையும் வழக்கமாக்கியுள்ளார்.

அனுஷ்கா சர்மா:

இவரது முகம் மேக்கப் போடாமலே எப்போதும் பளிச்சென்று இருக்கும். இயற்கையாகவே அவரது சருமம் அத்தனை ஜொலிப்பாக இருக்கிறது. மாயிஸரைசரும், சன்ஸ்கிரீனும் பூசினாலே இவர் பளபளப்பாகிவிடுவார். உதடுகளிலும், கன்னங்களிலும் லேசான சிவப்பு நிறம் கொடுத்து, புருவத்தை சரிசெய்து, கொஞ்சமாக கண்களுக்கும் மேக்கப் கொடுத்து அழகாக மாற இவருக்கு ஐந்து நிமிடங்களே போதுமானது.

“பொதுவாக நிறைய சரும பராமரிப்பு கிரீம்கள் இருந்தாலும் நான் அதிகம் நம்புவது எங்கள் வீட்டு தயாரிப்பைதான். சருமத்தை ஆழமாக சுத்தம் செய்யும்தன்மை நேந்திரன் பழத்திற்கு இருக்கிறது. மட்டுமின்றி சருமத்திற்கு தேவையான வைட்டமின்களையும் அது தருகிறது. அதனால் நேந்திரன் பழத்தை பிசைந்து சருமத்தில் பூசி, பராமரிக்கிறேன். தூங்கச்செல்லும்போது தேங்காய் எண்ணெய்யை பூசிக்கொள்வேன். அது சிறந்த மாயிஸரைசராக பயன் படுகிறது” என்கிறார்.

படப்பிடிப்பில் பரபரப்பாக இருந்தாலும் தினமும் உடற்பயிற்சி செய்வதில் அனுஷ்கா சர்மா ஆர்வம்காட்டுகிறார். கணவர் விராட் கோலியுடன் இணைந்து இவர் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளை சமூகவலைத்தளங்களில் அடிக்கடி பதிவிடுகிறார். அவை வைரலாகிக்கொண்டிருக்கின்றன. இடுப்பு தசையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும், இதயத்திற்கு வலுகொடுக்கவும் தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார்.

ஆலியா பட்:

“நாம் சத்துணவினை சாப்பிட்டு வந்தாலே சருமம், உதடு, கண்கள் எல்லாமும் அழகாகி விடும். அதனால் ஆரோக்கியத்தி்ற்கு எதிரான, அழகுக்கு எதிரான எந்த உணவையும் நான் உண்பதில்லை. பீட்ரூட், இனிப்புக்கிழங்கு போன்றவை உடலை சுத்தப்படுத்தும் சக்திமிக்கவை. அவைகளில் வைட்டமின் ஏ, டி போன்றவைகளும் இருக்கின்றன. போதுமான நேரம் நான் தூங்குவதும் என் அழகுக்கு காரணம். தினமும் 8 மணி நேரம் வரை உறங்குவேன். அவ்வளவு நேரம் தூங்குவதால் சருமத்திற்கு தேவையான அளவு ஓய்வுகிடைத்துவிடுகிறது. நம்மை எப்போதும் இளமையாகவைத்துக்கொள்ள தினமும் போதுமான நேரம் தூங்கவேண்டும்” என்கிறார், இந்த அழகின் தேவதை.

தீபிகா படுகோன்:

சினிமாவிற்கு வந்த நாளில் இருந்து இன்று வரை ஒரே மாதிரியான இயல்பான அழகில் ஜொலித்துக்கொண்டிருக்கிறார், தீபிகா படுகோன். இவரது ‘கிளீன் அன்ட் சிம்பிள் மேக்கப்’ பிரசித்திபெற்றது. ஜொலிக்கும் ‘க்ளோசி’ மேக்கப்பைவிட ‘மேட் பியூட்டி பினிஷ்’ இவருக்கு பொருத்தமாக இருக்கிறது. மூடிலிப் கலர், மேட் பவுண்ட்டேஷன் போன்றவைகளைதான் இவர் தனது திருமண அலங்காரத்திற்கும் பயன்படுத்தினார். அதுவே தனக்கு தனி அழகு தருவதாக சொல்கிறார்.

“நான் படப்பிடிப்பில் எவ்வளவு பிசியாக இருந்தாலும், இரவில் ரொம்பவும் தாமதமானாலும் முகத்தில் இருக்கும் மேக்கப் அனைத்தையும் நீக்காமல் தூங்கமாட்டேன். நான் சரும பராமரிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். இறந்த செல்களை நீக்கும் ‘எக்ஸோபோலியட்டட்’, சருமத்தை ஆழம் வரை சென்று சுத்தம் செய்யும் ‘க்ளன்ஸ்’, ஈரப்பதத்தை எப்போதும் தக்கவைக்க உதவும் ஹைட்ரேட்டட் போன்றவை சருமத்திற்கு மிக அவசியம். இந்த மூன்றையும் பத்தே நிமிடத்தில் ஒரே செயலில் செய்துமுடித்துவிடலாம். அதற்கு ‘கிளே மாஸ்க்’ உதவுகிறது.

நான் காலையில் சன்ஸ்கிரீன் பூசிக்கொள்வேன். இரவில் நைட் கிரீம் பூசிக்கொள்ளவும் தவறுவதில்லை. புருவங்கள் எனக்கு கூடுதல் அழகைத்தருகின்றன. என் புருவங்கள் வில் போன்று வளைந்திருக்காது. ஆனால் அது அகலமாகவும், அடர்த்தியாகவும் இருக்கும்” என்கிறார்.

தனது கட்டுடல் ரகசியத்தையும் தீபிகா படுகோன் வெளிப்படுத்துகிறார்:

“ஆரோக்கியமான உடலுக்கு தேவை, ஆரோக்கியமான மனது. அதனால் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள கூடுதல் கவனம் செலுத்துகிறேன். பிசியோதெரபியும், தியானமும் நான் செய்கிறேன். பேட்மிண்டன் வீராங்கனையாக இருந்ததால் என் உடல்வாகு கட்டுக்கோப்பாகத்தான் இருக்கிறது. நான் எல்லாவிதமான உடற்பயிற்சிகளும் செய்து உடலை எப்போதும் வலுவாக வைத்துக்கொள்கிறேன்” என்கிறார்.