விஜய்சேதுபதிக்கு வில்லன் வாய்ப்புகள்


விஜய்சேதுபதிக்கு வில்லன் வாய்ப்புகள்
x
தினத்தந்தி 11 Feb 2020 10:30 PM GMT (Updated: 2020-02-12T03:49:46+05:30)

விஜய்சேதுபதிக்கு வில்லன் வாய்ப்புகள் குவிகின்றன.

விஜய் சேதுபதி இமேஜ் பார்க்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. சீதக்காதியில் வயதானவராக வந்தார். விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட படங்களில் வில்லன் வேடம் ஏற்றார்.

இந்த படங்களுக்கு பிறகு அவருக்கு வில்லன் வாய்ப்புகள் குவிகின்றன. தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அடுத்து பிச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகும் உப்பெனா என்ற தெலுங்கு படத்திலும் வில்லனாக நடித்து இருக்கிறார். இதில் கதாநாயகனாக வைஷ்ணவ் தேஜ் நடித்துள்ளார். நாயகியாக கீர்த்தி ஷெட்டி வருகிறார்.

கதாநாயகிக்கு தந்தையாகவும், வில்லனாகவும் விஜய் சேதுபதி வருகிறார். ஏற்கனவே சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி தெலுங்கு படத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உப்பெனா படத்தின் விஜய் சேதுபதி தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த தோற்றம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. படம் ஏப்ரல் 2-ந்தேதி திரைக்கு வருகிறது.

விஜய் சேதுபதி நடித்துள்ளதால் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறது. கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லனாகவும் நடிக்கிறீர்களே? என்று விஜய் சேதுபதியிடம் கேட்டபோது, “இமேஜ் பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு வில்லன் வேடம் பிடித்து இருக்கிறது. அதனால் நடிக்கிறேன்” என்றார்

Next Story