சினிமா செய்திகள்

ஜூலி ஆண்ட்ரூஸ் + "||" + Hollywood heros; Julie Andrews

ஜூலி ஆண்ட்ரூஸ்

ஜூலி ஆண்ட்ரூஸ்
ஹாலிவுட்டில் ஆஸ்கார் விருது பெற்ற சிறந்த நடிகைகளில் ஒருவர், ஜூலி ஆண்ட்ரூஸ். இவர் நடிகை மட்டுமின்றி, சிறந்த பாடகரும், எழுத்தாளரும் கூட. இவரது இயற்பெயர், ஜூலியா எலிசபெத் வெல்ஸ்
1935-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந் தேதி, தேம்ஸ் நதிக்கரையில் உள்ள வார்டன் நகரில் பிறந்தவர், ஜூலி. இந்த இடம் இங்கிலாந்தின் சுர்ரே பகுதியில் உள்ளது. இயற்கையிலேயே நல்ல பாடகியாக பரிணமித்த இவர், நாடக மேடையில் நடித்தும் பாடியும் புகழ் பெற்றார். அதே போல் சினிமா உலகிலும் இவளது குடும்பம் சங்கீதத்தில் ஊறிப் போனது என்று கூறலாம். ஜூலியின் தாயார், பியானோ வாசிப்பதில் மிகவும் புகழ் பெற்றவர். தாயின் இரண்டாவது கணவரும் பாடகராக இருந்தார். அதனால்தான் ஜூலி தனது பெயருடன், தாயின் இரண்டாவது கணவரான ஆண்ட்ரூஸ் பெயரை இணைத்துக் கொண்டார்.

1940-ம் வருடத்தின் பிற்பகுதியில் இங்கிலாந்து மேடைகளில் நடித்து புகழ்பெற்ற ஜூலி, தனது திறமையை மேலும் வெளிப்படுத்த அமெரிக்கா பயணப்பட்டார். அவரது விடாமுயற்சியின் காரணமாக 1950-ம் ஆண்டு ஹாலிவுட்டில் நடிக்க அவருக்கு ஒரு படம் கிடைத்தது. அந்தப் படத்தின் பெயர் ‘தி பாய் பிரண்ட்’ (The Boy Friend). சங்கீதம் நிறைந்த இப்படத்தில், ஜூலியின் நடிப்பும், பாட்டும் பாராட்டப்பட்டது.

1956-ம் ஆண்டு பிரபல நடிகர் ரெக்ஸ்ஹாரிசனுடன் இணைந்து ‘மை பேர் லேடி’ (MY Fair Lady) படத்தில் பாடி நடித்தார். இந்தப் படத்திலும், அவரது பாட்டும், நடிப்பும் பாராட்டப்பட்டது. இதனால் ஜூலி, டோனி அவார்டுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் இவர் நடிகையாக புகழ்பெற்றது 1964-ம் ஆண்டுதான். அந்த ஆண்டில் முதலில் ‘தி அமெரிக்கனிசேஷன் ஆப் எமிலி’ (The Americanization of Emily) என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஜேம்ஸ் கார்னருடன் நடித்தார், ஜூலி. அதே வருடத்தில் ‘மேரி பாப்பின்ஸ்’ (Mary Poppins) என்ற படம் வெளிவந்தது. இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஜூலிக்கு, சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருது கிடைத்தது.

1965-ம் ஆண்டு ‘தி சவுண்ட் ஆப் மியூசிக்’ (The Sound of Music) திரைப்படம் வெளிவந்தது. இந்தப் படத்தில் ஜூலி ஆண்ட்ரூஸ் பாடிய பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருந்தது. அவரது புகழ் அமெரிக்கா முழுவதும் பரவியது. சிறந்த பாடகி என்று மக்கள் அனைவரும் அவரைக் கொண்டாடினர். இந்தப் படத்திற்காகவும் அவர் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

1968-ம் வருடம் மற்றொரு பாடகி நடிகையான ஜெர்டூர்லாரன்சுடன் இணைந்து ‘ஸ்டார்’ (Star) என்ற படத்தில் நடித்தார். 1970-ம் ஆண்டு மிக குறைந்த படங்களிலேயே ஜூலி நடித்திருந்தார். 1974-ம் ஆண்டு, ‘தி தாமரின்ட் ஷீடு’ (The Tamarind Seed) என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தை ஜூலியின் இரண்டாவது கணவரான பிளேக் எட்வர்ட்ஸ் இயக்கினார். 1979-ம் ஆண்டு தனது கணவர் இயக்கத்தில் ‘10’ என்ற படத்தில் ஜூலி நடித்தார். இந்தப் படத்தில் டட்லி மூர் என்ற நகைச்சுவை நடிகரும், போ டெர்க் என்ற நடிகையும் இணைந்து நடித்திருந்தனர்.

1980-ம் வருட ஆரம்பத்தில், புதிய வாய்ப்புகளை எதிர்கொண்டு நடிக்க வேண்டும் என்று தீர்மானித்தார், ஜூலி ஆண்ட்ரூஸ். அதிக படங்களில் நடிக்க முடிவு செய்தார். 1981-ம் ஆண்டு ‘எஸ்.ஓ.பி.’ (S.O.B.) என்ற திரைப்படத்தில் நடித்தார். இதுவும் அவரது கணவர் பிளேக் எட்வர்ட்ஸ் இயக்கியதுதான். இந்தப் படம், ஹாலிவுட் திரை உலகை அதிகமாக கிண்டல் செய்வது போல் அமைந்திருந்தது. அடுத்த படம் ‘விக்டர்/விக்டோரியா’ (Victor/Victoria). 1982-ல் வெளிவந்த இந்தப் படத்தில் ஒரு சமயத்தில் ஆணாகவும், பெண்ணாகவும் மாறி மாறி நடிக்க வேண்டிய கதாபாத்திரமாக ஜூலிக்கு அமைந்தது. இதற்காக மீண்டும் ஒரு முறை அவரது பெயர் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 1983-ம் ஆண்டு ‘தி மேன் கூ லவ்டு வுமன்’ (The Man Who Loved Women), 1986-ல் ‘தட்ஸ் லைப்’ (That's Life) படங்கள் வெளியானது. இவை அனைத்துமே பிளேக் எட்வர்ட்ஸ் இயக்கியவைதான். ஜூலி ஆண்ட்ரூஸ் தனது சினிமா உலக வாழ்க்கையில், கணவருடன் இணைந்து பல படங்களில் பணியாற்றினார்.

1996-ம் வருடம் மீண்டும் நாடக மேடைக்குத் திரும்பினார். ‘விக்டர்/விக்டோரியா’ கதையை, சங்கீத நாடகமாக மாற்றி, அதில் பிரதான வேடத்தில் நடித்தார். இந்த மேடை நாடகத்திற்காக அவரது பெயர், மூன்றாவது முறையாக டோனி அவார்டுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அவார்டு கிடைக்கப் பெற்றபோதும், அதை வேண்டாம் என்று மறுத்துவிட்டார். அதற்குக் காரணம், தன்னுடன் நடித்தவர்களை இந்த அவார்டு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்ற வருத்தம்தான்.

1997-ம் வருடம் ஜூலி ஆண்ட்ரூஸ், தொண்டையில் ஒரு சிறு அறுவை சிகிச்சை நடந்தது. அந்த சமயத்தில் இவளது தொண்டையில் சில நரம்புகள் பாதிக்கப்பட்டன. அதனால் அவரால், முன்பு போல் பாட முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் படங்களிலும், டெலிவிஷன் நாடகங்களில் மட்டுமே நடித்தார். நூற்றாண்டு முடியும் போது, இரண்டாம் மகாராணி எலிசபெத்தால், சிறந்த பாடகி மற்றும் நடிகை என்னும் விதமான கவுரவம் கிடைத்தது.

2001-ம் ஆண்டு ‘தி பிரின்சிஸ் டைரீஸ்’ (The Princess Diaries), 2004-ம் ஆண்டு அதன் இரண்டாம் பாகம் ஆகிய படங்களில் நடித்ததற்காகவும், இவருக்கு எலிசபெத்தால் பட்டம் வழங்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. பின்னர் ஒரு தொலைக்காட்சி தொடரில் ஒரு பாத்திரத்துக்குப் பின்னணி பேசி முடித்தார். அது ஒரு நீண்ட தொடர். 2010-ம் வருடம் வரை இதற்கான வேலை நடந்தது. நடிப்பதைத் தவிர, சிறுவர்- சிறுமிகள் ரசித்து படிக்கும் வகையில் கதை புத்தகங்களையும் எழுதினார். இதற்கு ஜூலியின் மூத்த மகள் உதவி செய்தார். இவர் ஜூலியின் முதல் கணவரான டோனி வால்டனுக்கு பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது கணவர் மூலமாகவும் இரண்டு பெண் பிள்ளைகள் உண்டு.

2007-ம் வருடம் ஸ்சீரின் ஆக்டர்ஸ் கில்டு என்ற அமைப்பு, ஜூலிக்கு ‘சிறந்த வாழ்நாள் நடிகை’ என்னும் பட்டத்தை வழங்கி கவுரவித்தது. 2015-ம் வருடம் நடந்த 87-வது ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்வும், ‘தி சவுண்ட் ஆப் மியூசிக்’ திரைப்படத்திற்காக இவருக்கு சிறப்பு பட்டம் ஒன்று வழங்கப்பட்டது. 2008-ம் ஆண்டு ‘எனது இளமைக்கால நினைவுகள்’ என்ற புத்தகத்தை எழுதினார். கடைசியாக 2018-ம் ஆண்டு வெளியான ‘ஆக்குவாமேன்’ திரைப்படத்தில் வரும் ‘கராதன்’ என்ற உயிரினத்திற்காக வாய்ஸ் கொடுத்திருந்தார். சிறந்த நடிகையாகவும், அமெரிக்கா முழுவதுமே பாராட்டிய பாடகியாகவும் வலம் வந்தவரின் இந்த வெற்றிப் பயணம் அனைவருக்கும் ஒரு உதாரணம்.