சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, ‘தர்பார்’ படத்தை அடுத்து சிவா டைரக்‌ஷனில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில், அவருக்கு ஜோடி யார்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

அந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 கதாநாயகிகள் இருக்கிறார்கள். அவர்களில் கீர்த்தி சுரேசுக்கு மகள் வேடம். குஷ்புவுக்கு வில்லி வேடம். எஞ்சியுள்ள மீனா, நயன்தாரா இருவருமே ரஜினிகாந்துக்கு ஜோடி என்று படக்குழுவினர் கூறுகிறார்கள்!

***

கண்ணழகி, சிரிப்பழகி என்று ஒவ்வொரு கதாநாயகிக்கும் பெயருக்கு முன்னால் ஒரு பட்டம் இருக்கிறது. அதன்படி, காஜல் அகர்வாலுக்கு என்ன பட்டம் கொடுக்கலாம்? (வேல்ராஜ், சேலம்)

ரம்பாவுக்கு என்ன பட்டம் இருந்ததோ, அதையே காஜல் அகர்வாலுக்கும் கொடுத்து விடலாம்! பாவம், பிழைத்து போகட்டும்!!

***

பிரபுதேவாவுக்கு நிவேதா பெத்துராஜ் பிடித்த கதாநாயகி ஆகிவிட்டாராமே... அப்படியா? (காதர்கான், அரூர்)

பிரபுதேவாவின் (அன்பு) பிடியில் நிவேதா பெத்துராஜ் சிக்கிவிட்டதாக கிசுகிசுக்கிறார்கள். அந்த பிடியில் இருந்து அவர் தப்புவாரா, மாட்டாரா? என்று சில கதாநாயகிகள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்!

***

குருவியாரே, ‘வலிமை’ படத்தில் அஜித்குமாருக்கு என்ன வேடம்? அவருக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகி யார்? இந்த படத்தை ரசிகர்கள் எந்த அளவுக்கு எதிர்பார்க்கிறார்கள்? (எம்.சரவண பாண்டியன், குமாரபாளையம்)

‘வலிமை’ படத்தில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘காலா’ பட நாயகி ஹூமா குரோசி நடிக்கிறார். அஜித் இதற்கு முன்பு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்த ‘மங்காத்தா’ மிகப்பெரிய வெற்றி பெற்றதால், மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் ‘‘வலிமை’ படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது!

***

கார்த்தி கிராமத்து இளைஞர் வேடத்துக்கும் பொருந்துகிறார். நகரத்து இளைஞர் வேடத்துக்கும் பொருந்துகிறாரே... எப்படி? (ஆர்.புவன், வேடசந்தூர்)

கார்த்தி நகரத்தில் வளர்ந்தவர் என்றாலும், அவருடைய சொந்த ஊர் கிராமம் என்பதால், நகரவாசி, கிராமவாசி ஆகிய 2 வேடங்களுக்கும் அவர் பொருந்துகிறார்!

***

குருவியாரே, வெள்ளித்திரை நடிகைகளை விட, அழகான நடிகைகள் ‘சின்னத்திரை’யில் இருக்கிறார்களே...அவர்களை வெள்ளித்திரையில் பயன்படுத்தாதது ஏன்? (மா.வெங்கடேசன், ஸ்ரீரங்கம்)

சில தயாரிப்பாளர்களின் ஒப்பந்த பத்திரம்தான் காரணம்!

***

அண்ணி ஜோதிகாவுடன் சேர்ந்து நடித்த கார்த்தி, அண்ணன் சூர்யாவுடன் இணைந்து நடிப்பது எப்போது? (கே.சீனிவாசன், மதுரை)

இருவருக்கும் பொருந்துகிற மாதிரி கதையும், கதாபாத்திரங்களும் அமைந்தால், நாளைக்கே கூட ‘மேக்கப்’ போட தயார் என்கிறார், கார்த்தி!

***

பாட்டி நடிகை பரவை முனியம்மாவின் பெயரில், ‘பரவை’ என்பது எதை குறிக்கிறது? (எம்.ஜவகர், டி.கல்லுப்பட்டி)

‘பரவை’ என்பது அவருடைய ஊரை குறிக்கிறது. முனியம்மா என்ற தன் பெயருக்கு முன்னால் ஊர் பெயரை அவர் சேர்த்துக்கொண்டார்!

***

குருவியாரே, 42 வருடங்களாக ‘சின்னத்திரை,’ ‘பெரியதிரை’ இரண்டிலும் உற்சாகமாக நடித்துக்கொண்டிருக்கும் ராதிகா சரத்குமாருக்கு ‘டாக்டர்’ அல்லது ‘பத்மஸ்ரீ’ பட்டம் கொடுத்து கவுரவிக்காதது ஏன்? (ஆர்.ரவீந்திரன், திருச்சி)

அவர் ஒரு தமிழ் பெண் என்பதால் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள் போலும். தூய தமிழரான ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசனுக்கே ‘சிறந்த நடிகர்’ விருது கொடுக்கப்படாதது போல்தான் இதுவும்...

***

பழைய திரைப்படங்களின் பெயர்களை புதிய படங்களுக்கு மீண்டும் சூட்டுவதற்கு என்ன காரணம்? (என்.விஸ்வநாத், புதுச்சேரி)

தமிழ் பட உலகில் கதை பஞ்சம் இருப்பது போல், ‘டைட்டில்’ பஞ்சமும் இருக்கிறது போலும்!

***

குருவியாரே, ‘சித்திரம் பேசுதடி’ பட புகழ் பாவனாவை ‘அந்த’ சம்பவத்துக்குப்பின், படங்களில் பார்க்க முடிவதில்லையே...? (க.ரகுராம், சங்ககிரி)

பாவனா தற்போது ஒரு கன்னட படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்ற பேராசை இல்லையாம்!

***

சத்யராஜ் ‘மார்க்கெட்’ நிலவரம் எப்படியிருக்கிறது? (எஸ்.சார்லஸ், தூத்துக்குடி)

சத்யராஜ் ‘பாகுபலி’ படத்தில் ‘கட்டப்பா’வாக நடித்த பிறகு அவருடைய ‘மார்க்கெட்’ உச்சத்துக்கு போய் விட்டது. குறிப்பாக தெலுங்கு பட உலகில் அவர் ரொம்ப ‘பிஸி’யாகி விட்டார். அவருக்கு மலையாள பட வாய்ப்புகளும் வருகின்றன. அத்தனை பட வாய்ப்புகளையும் ஏற்காமல், தேர்வு செய்து படங்களில் நடித்து வருகிறார்!

***

குருவியாரே, சினிமாவில் மறுபிரவேசம் செய்த நதியா மீண்டும் காணாமல் போய்விட்டாரே... என்ன வி‌ஷயம்? (வெ.இன்பராஜ், பெரியகுளம்)

அவர் கேட்கிற சம்பளம் தயாரிப்பாளர்களுக்கு கட்டுப்படியாகவில்லையாம். அதனால் அவருக்கு போக வேண்டிய பட வாய்ப்புகள், வேறு முன்னாள் கதாநாயகிகளுக்கு போகிறதாம்!

***

நல்ல நிறமும், அழகான தோற்றமும் கொண்ட காஜல் அகர்வாலுக்கு பிரபல கதாநாயகர்கள் அனைவரின் படங்களிலும் வாய்ப்பு கிடைத்து விடுகிறதே... எப்படி? (எஸ்.யுகேந்திரன், மதுராந்தகம்)

உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. (பி.கு: அவர் பயன்படுத்தும் வாசனை திரவியம் எல்லா கதாநாயகர்களுக்கும் பிடித்து இருக்கிறதாம்!

***

குருவியாரே, புதிதாக பட உலகுக்கு வருகிற இளம் இசையமைப்பாளர்கள், மென்மையான ராகங்களை கண்டுகொள்வதில்லையே, ஏன்? (வி.அன்வர் அலிகான், குன்னூர்)

வலிப்பு வந்தது போல் நடனம் ஆடும் சில கதாநாயகர்களுக்கு மென்மையான ராகங்கள் பிடிப்பதில்லையாம். அவர்களின் ரசனைக்கேற்ப இசையமைத்தால் போதும் என்று அந்த இளம் இசையமைப்பாளர்கள் நினைக்கிறார்களாம்!

***

சிவாஜி–கே.ஆர்.விஜயா இணைந்து நடித்து அதிக நாட்கள் ஓடிய படம் எது? (அர்ஜுன் கிருஷ்ணன், நெல்லை–6)

‘திரிசூலம்!’

***

குருவியாரே, லதா மங்கேஸ்வர், ஆஷா போன்ஸ்லே ஆகிய இருவரையும் அடுத்து இனிமையான குரலும், அழகான தோற்றமும் கொண்ட இந்தி பாடகி யார்? (கோ.தம்பிதுரை, தர்மபுரி)

‘ஸ்ரேயா கோ‌ஷல்!’ இவருடைய இனிய குரல் போல் அழகான தோற்றமும் கொண்ட இந்தி பாடகி, இவர்தான்!

***

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய முதல் படம் எது? (ஜி.விஜய், ராசிபுரம்)

‘தீனா!’