கரடு முரடான பாதையில் குங்பூ நடிகை


கரடு முரடான பாதையில் குங்பூ நடிகை
x
தினத்தந்தி 16 Feb 2020 9:40 AM GMT (Updated: 16 Feb 2020 9:40 AM GMT)

இரண்டு வருடங்களாக ஒரே ஒரு படத்திற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு நடித்து முடித்திருக்கிறார், நீதா பிள்ளை.

ருடத்திற்கு இரண்டு, மூன்று படங்களில் நடித்துவிடும் நடிகைகளுக்கு மத்தியில் இரண்டு வருடங்களாக ஒரே ஒரு படத்திற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு நடித்து முடித்திருக்கிறார், நீதா பிள்ளை. இவர் பூமரம் என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானவர். அடுத்து ‘த குங்பூ மாஸ்டர்’ என்ற படத்தில் நடிப்பதற்காக குங்பூ பயிற்சிகளை மேற்கொண்டு, அந்த படத்தில் அதிரடி ஆக்‌ஷன் நாயகியாக ஜொலித் திருக்கிறார். இந்தப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கரடுமுரடான பகுதியில் நடந்த பயிற்சி மற்றும் படப்பிடிப்பு பற்றி அவருடன் உரையாடல்!

மென்மையான, அழகான நடிகையான உங்களுக்கு அதிரடி சாகசம்புரியும் குங்பூ கதாபாத்திர வாய்ப்பு எப்படி கிடைத்தது?

நான் பூமரம் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தபோதே டைரக்டர் ஏபிரித் ஷைன் அடுத்து உருவாக்கப்போகும் ‘த குங்பூ மாஸ்டர்’ படம் பற்றி சொன்னார். திடீரென்று ஒரு நாள் அவர் அதில் உள்ள முக்கியமான கதாபாத்திரம் பற்றி என்னிடம் எடுத்துக்கூறி, அதில் நடிக்க சம்மதமா? என்று கேட்டார். அது மிக வித்தியாசமான கதாபாத்திரமாக இருந்ததால் நான் உடனே சம்மதம் தெரிவித்தேன்.

2017-ம் ஆண்டு பூமரம் ஷூட்டிங் முடிந்தவுடன் அடுத்த படத்திற்கான குங்பூ பயிற்சியை தொடங்கினார்கள். எனக்கு கல்லூரி காலத்தில் விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும், தற்காப்பு கலையில் எந்த அனுபவமும் கிடையாது. அதனால் பயிற்சி காலத்தில் நான் ரொம்பவும் கஷ்டப்பட்டேன். முதலில் கிக் பாக்சிங் பயிற்சி கொடுத்தார்கள். பின்பு டேக்வாண்டோ, ஜூடோ, கராத்தே போன்றவை களுக்கான பயிற்சியை மூன்று மாதங்கள் வீதம் பெற்றேன். பின்பு நீண்ட நாட்கள் குங்பூ பயிற்சி அளித்தார்கள்.

அந்த பயிற்சிகளால்தான் உங்கள் உடல் ரொம்பவும் மெலிந்துபோய்விட்டதா?

ஆமாம். நான் உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டு உடல் மெலிந்துவிடவில்லை. கடுமையான தற்காப்புக்கலை பயிற்சியால் என் உடல் மெலிந்துவிட்டது. நான் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் ஆழ்ந்துபோய்விடுவேன். அப்போது உணவு பற்றிகூட நினைத்துப்பார்க்கமாட்டேன். நான் நன்றாக சாப்பிடவேண்டும் என்று என் அம்மாவும், தங்கையும் எதிர்பார்ப்பார்கள். அவர்கள் கையில் எடுத்துதந்தால் கூட நான் சாப்பிடுவதில்லை. அந்த அளவுக்கு பயிற்சியே கதி என்று ஆகிவிட்டேன்.

எனக்கு சாகச விளையாட்டுகளில் எப்போதுமே ஈடுபாடு உண்டு. அந்த ஈடுபாடுதான் இந்த படத்தில் நடிக்க என்னை தூண்டியது. மேலும் அதிரடி சாகசங்கள் நிறைந்த சினிமாக்கள் மலையாளத்தில் குறைவு. அதுபோன்ற பல காரணங்களை கருத்தில்கொண்டு தான் நான் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன். இப்போது நடித்து முடித்துவிட்ட திருப்தியில் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறேன். படப்பிடிப்பின் கடைசி நாளில் கையில் காயம் ஏற்பட்டுவிட்டது. அது மட்டும்தான் கஷ்டமான அனுபவம்.

கரடுமுரடான மலைப்பகுதியில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

உத்தரகாண்ட்டில் போய் இறங்கியபோது கிடைத்த முதல் தகவலே அதிர்ச்சி தந்தது. மலைப்பகுதியில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகுதிக்கு வாகனம் செல்ல வாய்ப்பில்லை என்றார்கள். அவ்வளவு பனிப்பொழிவு இருந்தது. ஐந்து வருடங்களுக்கு பிறகு அப்போதுதான் மிக அதிகமான பனிப்பொழிவு இருப்பதாக சொன்னார்கள். உடமைகளையும், படப்பிடிப்பு கருவி களையும் சுமந்துகொண்டு ஐந்து கி.மீ. தூரம் நடந்து, தங்குமிடமான ஜோஷி மடத்திற்கு சென்றோம்.

முதல்கட்ட படப்பிடிப்பு முழுவதும் பனியில்தான் நடந்தது. ஷூட்டிங் நடைபெறும் இடம் வரை பெரும்பாலான நாட்கள் காரில் செல்லமுடியவில்லை. இடையிலே இறங்கி நடந்துபோகும் சூழ்நிலை உருவானது. சில நாட்கள் பனிப்பொழிவால் படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டது. பனியில் உடல் அடிக்கடி வெலவெலத்துப் போகும். தசைகள் மரத்துப்போய் நடிக்க முடியாத சூழ்நிலையும் உருவானது. 170 நாட்கள் அங்கே படப்பிடிப்பு நடந்தது. கடைசிகட்ட படப்பிடிப்பில் நான் கீழே விழுந்து கையை ஊன்றவேண்டும். அப்போது நிலைதடுமாறிவிட்டதால் கையில் பலத்த காயம் ஏற்பட்டுவிட்டது.

சினிமாவுக்கு அப்பால் நீங்கள் விரும்பும் விஷயங்கள் என்னென்ன?

நான் அமெரிக்காவுக்கு சென்று எம்.டெக். படிக்க திட்டமிட்டிருந்தேன். அதற்குள் எப்படியோ நடிகையாகும் சூழ்நிலை உருவாகிவிட்டது. பாடுவதும், கார் ஓட்டிச்செல்வதும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். சிறுவயதில் இருந்தே விளையாட்டுகளில் ஆர்வமாக இருந்தேன். ஓடுவது, குதிப்பது போன்ற விளையாட்டுகளை அதிகம் ரசித்து செய்தேன். ஷாப்பிங் செல்லவும் பிடிக்கும். ஆனாலும் அதற்கான வாய்ப்புகள் மிக குறைவு. எனது தங்கை மனீஷாதான் எனக்காக ஷாப்பிங் செய் கிறாள். அவள் என் உயிர். அவளின்றி என்னால் வாழ முடியாது. அடிக்கடி அழகாக கூந்தலை வெட்டிக்கொள்வது எனக்கு பிடிக்கும். முடி அழகுதான் எனக்கு முக்கிய அழகு.

காதலில் உங்களின் எதிர்பார்ப்பு என்ன?

காதல் படங்களை பார்த்து நான் வியந்திருக்கிறேன். ஆனால் நிஜத்தில் காதல் அப்படிப்பட்டதல்ல என்பதும் எனக்குத் தெரியும். நிஜவாழ்க்கையில் காதல் என்பது கடினமானது. அன்பின் தீவிரத்தைவிட ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதில்தான் காதலின் வெற்றி அடங்கியிருக்கிறது. காதலர்களுக்கிடையே தினமும் குற்றஞ்சாட்டுவதும், சந்தேகமும் இருந்தால் அந்த காதல் உருப்படாது. பயமின்றி, எதையும் மனம்விட்டு பேசக்கூடிய, மரியாதையுடன் பழகக்கூடிய, மனதை புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் உருவாகுவதே பொருத்தமான காதல் என்று நான் நினைக்கிறேன்.

Next Story