பட அதிபர் சங்கத்தில் புகார் சந்தானத்தின் சர்வர் சுந்தரம் முடக்கம்


பட அதிபர் சங்கத்தில் புகார் சந்தானத்தின் சர்வர் சுந்தரம் முடக்கம்
x
தினத்தந்தி 17 Feb 2020 12:24 AM GMT (Updated: 2020-02-17T05:54:05+05:30)

சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் படம் கடந்த 31-ந்தேதி திரைக்கு வருவதாக இருந்தது. அதேநாளில் சந்தானத்தின் டகால்டி படமும் வெளியானதால் சர்வர் சுந்தரம் ரிலீசை 14-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். ஆனால் அந்த தேதியிலும் படம் வரவில்லை.

மாறாக வருகிற 21-ந்தேதி சர்வம் சுந்தரம் திரைக்கு வரும் என்று அறிவித்தனர். ஆனால் அப்போதும் திரைக்கு வர வாய்ப்பில்லை. மீண்டும் படம் தள்ளிப்போகிறது. படத்தின் இயக்குனர் ஆனந்த் பால்கி, “டுவிட்டரில் படம் குறித்த தவறான அறிவிப்புக்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சில தவறுகளினால் இது நடந்துள்ளது. ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.

இந்த நிலையில் சர்வர் சுந்தரம் படத்தை வாங்கிய வினியோகஸ்தர் களால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. வினியோக உரிமை பெற்றவர் படத்தை மேலும் இருவருக்கு கை மாற்றியதாகவும் அவர்கள் படத்தை அடமானம் வைத்துள்ளதாகவும் பட அதிபர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

படத்தின் தயாரிப்பாளர் கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமார் கூறும்போது, சர்வர் சுந்தரம் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களால் படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. படத்தை திரைக்கு கொண்டு வராமல் முடக்கி இருப்பது வேதனை அளிக்கிறது. இந்த பிரச்சினையில் தீர்வுகாணும்படி தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி உள்ளோம் என்றார். தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

Next Story