படத்தின் பெயர் மாறியது: ‘பற’ என்ற டைட்டிலுக்கு தணிக்கை குழு கடும் எதிர்ப்பு


சாஜிமோன்- சாந்தினி
x
சாஜிமோன்- சாந்தினி
தினத்தந்தி 18 Feb 2020 6:44 AM GMT (Updated: 18 Feb 2020 6:44 AM GMT)

‘பச்சை என்கிற காற்று’ என்ற அரசியல் கதையம்சம் கொண்ட படத்தை டைரக்டு செய்தவர், கீரா. இவர் அடுத்து, ‘மெர்லின்’ என்ற திகில் படத்தை இயக்கினார்.

அந்த படத்தை அடுத்து, ஆணவ கொலையை கருவாக கொண்ட ‘பற’ படத்தை டைரக்டு செய்தார். ‘பற’ என்ற டைட்டிலுக்கு தணிக்கை குழு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் படத்தின் பெயர், ‘எட்டுத்திக்கும் பற’ என்று மாற்றப்பட்டு இருக்கிறது. இதுபற்றி டைரக்டர் கீரா கூறுகிறார்:-

“பற என்ற டைட்டிலுக்கு தணிக்கை குழுவினர் அனுமதி தரவில்லை. படத்தின் பெயரை மாற்ற சொன்னார்கள். பெயரை மாற்றவில்லை என்றால், ‘ஏ’ சான்றிதழ் தருவதாக சொன்னார்கள். வணிக ரீதியிலும் பாதிப்பு ஏற்பட்டது. அதனால், ‘எட்டுத்திக்கும் பற’ என்று படத்தின் பெயர் மாற்றப்பட்டு இருக்கிறது.

நம் சமூகத்தில் ஆணவ கொலைகள் அச்சுறுத்தி வரும் வேளையில், ‘பற’ படம் வெளிவருவது மிக தேவையான ஒன்றாக இருக்கும். இந்த படத்தின் டைட்டிலை வைத்து சிலர் , ‘பற’ என்பது சாதியத்தின் குறியீடா என்று கேட்கிறார்கள். ‘பற’ என்பது சாதியத்தின் குறியீடு அல்ல. ‘பற’ என்றால் பறத்தல். அது விடுதலையின் குறியீடு.

ஒரு இரவில் நடக்கும் கதை இது. இன்றைய இளைஞர்களுக்கு தேவையான கருத்தை அவர்கள் ரசிக்கிற மாதிரி சொல்லி யிருக்கிறோம்., படத்தில் அம்பேத்கர் என்ற கதாபாத்திரத்தில், சமுத்திரக்கனி நடித்துள்ளார். அவருடன் சாஜிமோன், முனீஸ்காந்த், சாந்தினி, சம்பத்ராம் ஆகியோரும் நடித்துள்ளனர். பெவின்ஸ் பால், விஜயா ராமச்சந்திரன் ஆகியோர் தயாரிக்க, இணை தயாரிப்பு: முகிலன், வினோத்குமார். படம், அடுத்த மாதம் (மார்ச்) வெளிவரும்.”

Next Story