“நடிகர்கள் இணைந்து நடிப்பது நல்லது” -அருண் விஜய், பிரசன்னா பேட்டி


“நடிகர்கள் இணைந்து நடிப்பது நல்லது”   -அருண் விஜய், பிரசன்னா பேட்டி
x
தினத்தந்தி 18 Feb 2020 10:15 PM GMT (Updated: 2020-02-19T01:27:49+05:30)

நடிகர்கள் இணைந்து நடிப்பது நல்லது என்று நடிகர்கள் அருண் விஜய், பிரசன்னா கூறினர்.

கார்த்திக் நரேன் இயக்கி உள்ள ‘மாபியா’ படத்தில் அருண் விஜய், பிரசன்னா இணைந்து நடித்துள்ளனர். கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் வருகிறார். சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அருண் விஜய் கூறியதாவது:-

“தடம் படத்துக்கு பிறகு மாபியா படத்தில் நல்ல கதாபாத்திரம் அமைந்துள்ளது. இதில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக வருகிறேன். நிறைய புதிய விஷயங்களை முயற்சி செய்துள்ளேன். எனது தோற்றமும் ஸ்டைலாக இருக்கும். பிரசன்னாவுக்கும், எனக்கும் நடக்கும் மோதலில் விறுவிறுப்பை பார்க்கலாம்.

கார்த்திக் நரேன் படத்தை தெளிவாக எடுத்துள்ளார். கதையோடு காதலும் இருக்கும். படங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது ஆரோக்கியமான விஷயம். இதனால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்கும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் நடிகர் பிரசன்னா பேசும்போது, “படங்களில், ஒன்றுக்கு மேற்பட்ட கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது நல்ல விஷயம். தொடர்ந்து சில படங்களில் வில்லனாக நடிப்பது எனது இமேஜை பாதிக்காது. மீண்டும் கதாநாயகனாக நடிப்பதற்கு உதவவே செய்யும். எனவே வில்லன் வேடங்களை நேர்மறையாகவே பார்க்கிறேன். மாபியா படத்தில் அலட்டிக்கொள்ளாத வித்தியாசமான வில்லனாக நடித்து இருக்கிறேன். சொந்த படம் தயாரிக்கும் எண்ணம் இருக்கிறது” என்றார்.

நிகழ்ச்சியில் பிரியா பவானி சங்கர், இசையமைப்பாளர் ஜாக்ஸ் பெஜாய், பாடல் ஆசிரியர் விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story