கிரிக்கெட் வீரருடன் காதலா? நடிகை அனுஷ்கா விளக்கம்


கிரிக்கெட் வீரருடன் காதலா?   நடிகை அனுஷ்கா விளக்கம்
x

நடிகை அனுஷ்கா கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.

ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள அனுஷ்காவுக்கு இப்போது 38 வயது. இவருக்கும், தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் காதல் என்று கிசுகிசுக்கள் வந்தன. அதை இருவரும் மறுத்தார்கள். பின்னர் தொழில் அதிபரை அனுஷ்கா மணக்க இருப்பதாக தகவல் வெளியானது. அப்படி எதுவும் நடக்கவில்லை.

தற்போது கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. அந்த வீரர் வட இந்தியாவை சேர்ந்தவர் என்றும், தென்னிந்திய அணி ஒன்றுக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாடி வருகிறார் என்றும் கூறப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்து அனுஷ்கா கூறியதாவது:-

“காதல், திருமணம் என்றெல்லாம் என்னைப்பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. பல தடவை எனக்கு திருமணமும் செய்து வைத்து விட்டார்கள். ஒரு தொழில் அதிபரை காதலிக்கிறேன் என்றனர். டாக்டரை விரும்புவதாக கூறினார்கள். அதன்பிறகு என்னுடன் நடித்த கதாநாயகர்களுடன் இணைத்து பேசினார்கள்.

இப்போது கிரிக்கெட் வீரரை காதலிக்கிறேன் என்கின்றனர். எதுவும் உண்மை இல்லை. என்னை ஏன் இப்படி குறி வைக்கிறார்கள் என்ற வருத்தம் ஏற்படுகிறது. ஆனாலும் நடிகைகள் பற்றி இதுபோல் வதந்திகள் பரவுவது சகஜம்தான். எனது திருமண முடிவை பெற்றோர்களிடம் விட்டுவிட்டேன். அவர்கள் யாரை பார்த்து கையை காட்டுகிறார்களோ அவர் தாலி கட்ட கழுத்தை நீட்டுவேன்.”

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.

Next Story