விளம்பர நிகழ்ச்சியை புறக்கணிப்பதா? நடிகை திரிஷாவுக்கு பட அதிபர் எச்சரிக்கை “சம்பளத்தில் ஒரு பகுதியை திருப்பி கொடுக்க வேண்டும்”


விளம்பர நிகழ்ச்சியை புறக்கணிப்பதா? நடிகை திரிஷாவுக்கு பட அதிபர் எச்சரிக்கை “சம்பளத்தில் ஒரு பகுதியை திருப்பி கொடுக்க வேண்டும்”
x
தினத்தந்தி 23 Feb 2020 12:48 AM GMT (Updated: 23 Feb 2020 12:48 AM GMT)

படத்தின் விளம்பர நிகழ்ச்சியை புறக்கணித்த நடிகை திரிஷாவுக்கு பட அதிபர் டி.சிவா எச்சரிக்கை விடுத்தார். “சம்பளத்தில் ஒரு பகுதியை தயாரிப்பாளருக்கு திருப்பி கொடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

சென்னை,

திரிஷா கதாநாயகியாக நடித்திருக்கும் ‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் விளம்பர நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு திரிஷா வரவில்லை. அதற்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர்கள் கண்டனம் தெரிவித்தார்கள். பட அதிபர் டி.சிவா பேசும்போது கூறியதாவது:-

“பெரிய கதாநாயகன் இல்லாமல், விளம்பர நோக்கோடு இல்லாமல், நட்சத்திர அந்தஸ்துடன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார், திருஞானம். இப்படிப்பட்ட படத்தின் விளம்பரத்துக்கு திரிஷா வரவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம். நயன்தாரா ஒப்பந்த பத்திரத்திலேயே “படவிழாக்களிலும், விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டேன்” என்று கூறிவிடுகிறார். அதனால் அவரைப் பற்றி பேசுவதற்கு இல்லை.

திரிஷா தொடர்ந்து அவர் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால், சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை தயாரிப்பாளருக்கு திருப்பித்தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கிறேன்.” இவ்வாறு டி.சிவா பேசினார்.

பட அதிபரும், டைரக்டருமான சுரேஷ் காமாட்சி பேசியதாவது:-
“சில நடிகர்-நடிகைகள் அவர்கள் நடிக்கும் பட விழாக்களுக்கும், விளம்பர நிகழ்ச்சிகளுக்கும் வருவதில்லை. அவர்கள் ஏன் படவிழா மற்றும் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கிறார்கள்? என்று புரியவில்லை. பெரிய கதாநாயகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் போன்றவர்களே தாங்கள் நடிக்கும் பட விழாக்களுக்கு வரும்போது, இவர்கள் ஏன் வருவதில்லை என்று தெரியவில்லை.

உங்களைப் போன்ற பிரபல நட்சத்திரங்களை வைத்து படம் எடுத்தால்தான் விளம்பரமாகும் என்று எடுக்கிறோம். இல்லையென்றால், புதுமுகங்களை வைத்தே எடுத்து விடுவோமே...திரிஷாவுக்கு என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.” மேற்கண்டவாறு சுரேஷ் காமாட்சி பேசினார்.

விழாவில் டைரக்டர் கே.பாக்யராஜ், பட அதிபர்கள் கே.ராஜன், எச்.முரளி, படத்தின் டைரக்டர் திருஞானம் ஆகியோரும் பேசினார்கள்.

Next Story