தொலைக்காட்சி தொடர்களில் சினிமா பட தலைப்புகளை பயன்படுத்துவதா? பட அதிபர் கேயார் எதிர்ப்பு


தொலைக்காட்சி தொடர்களில் சினிமா பட தலைப்புகளை பயன்படுத்துவதா? பட அதிபர் கேயார் எதிர்ப்பு
x
தினத்தந்தி 24 Feb 2020 12:27 AM GMT (Updated: 2020-02-24T05:57:24+05:30)

சமீபகாலமாக டி.வி. தொடர்களில், அனுமதியில்லாமல் சினிமா தலைப்புகளை பயன்படுத்துகின்றனர். ஒரு திரைப்படத்திற்கு தலைப்பு என்பது முக்கியமானது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர் கேயார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“டி.வி. தொடர்களால் சினிமா ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக டி.வி. தொடர்களில், அனுமதியில்லாமல் சினிமா தலைப்புகளை பயன்படுத்துகின்றனர். ஒரு திரைப்படத்திற்கு தலைப்பு என்பது முக்கியமானது. சில நேரங்களில் தலைப்பு பிரச்சினை, பெரிய பஞ்சாயத்தாக விசுவரூபம் எடுத்து, நீதிமன்றம் வரைக்கும் சென்று படத்தின் வெளியீட்டை கூட தடை செய்து இருக்கிறது.

ஆனால், டி.வி. தொடர்களில் சர்வ சாதாரணமாக சினிமா தலைப்புகளை பயன்படுத்தி வருகிறார்கள். என்னுடைய முதல் படமான ஈரமான ரோஜா தலைப்பை ‘கூகுளில் டைப்’ செய்தால், ஈரமான ரோஜாவே என்ற தமிழ் சீரியல் தான் முதலில் வருகிறது. என் மற்ற படங்களான இரட்டை ரோஜா, பூவே பூச்சூடவா போன்ற படங்களின் தலைப்புகளும் டி.வி. தொடர்களில் பயன்படுத்தி வருகிறார்கள்.

மற்ற பல தயாரிப்பாளர்களின், இயக்குனர்களின் தலைப்புகளையும் அனுமதி பெறாமல் டி.வி. தொடர்களில் பயன்படுத்துகின்றனர். சினிமா தலைப்புகளை பயன்படுத்தி ஆதாயம் தேடி கொள்கிறார்கள். ஒரு தலைப்பு கூட சுயமாக சிந்திக்க தெரியாமல் டி.வி. தொடர் எடுப்பது என்பது வேதனையாக இருக்கிறது. இது கண்டனத்திற்கும் உரியது.

டி.வி. தொடர்களுக்கும், சினிமாவை போல் தணிக்கை என்று ஒன்று இருந்தால், இப்படிப்பட்ட முறைகேடுகளைத் தவிர்க்கலாம். இந்த முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, சட்டப்படி நீதிமன்றத்தை அணுக உள்ளேன்.”

Next Story