சினிமா செய்திகள்

புதுப்பேட்டை 2-ம் பாகம்? மீண்டும் படம் இயக்க தயாராகும் செல்வராகவன் + "||" + Selvaraghavan is ready to direct the film again

புதுப்பேட்டை 2-ம் பாகம்? மீண்டும் படம் இயக்க தயாராகும் செல்வராகவன்

புதுப்பேட்டை 2-ம் பாகம்?   மீண்டும் படம் இயக்க தயாராகும் செல்வராகவன்
செல்வராகவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடுத்த படத்துக்கான கதையை எழுத தொடங்கி விட்டதாக குறிப்பிட்டு உள்ளார்.
தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என்று வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை கொடுத்தார். சூர்யாவை வைத்து இயக்கிய என்.ஜி.கே. படம் கடந்த வருடம் மே மாதம் திரைக்கு வந்தது.

அதன்பிறகு புதிய பட வேலைகளில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருந்தார். செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்த மன்னவன் வந்தானடி, எஸ்.ஜே.சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் சில வருடங்களுக்கு முன்பே முடிந்தும் இன்னும் திரைக்கு வராமல் முடங்கி உள்ளன.

இந்த நிலையில் செல்வராகவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடுத்த படத்துக்கு தயாராகி விட்டதாகவும், படத்துக்கான கதையை எழுத தொடங்கி விட்டதாகவும் குறிப்பிட்டு உள்ளார். இது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. செல்வராகவனின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

புதுப்பேட்டை இரண்டாம் பாகத்தை எடுக்க இருவரும் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது. அதுபோல் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டமும் செல்வராகவனிடம் இருக்கிறது. எனவே இந்த இரண்டில் எந்த படத்தை அவர் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.