சினிமா செய்திகள்

ஜுராசிக் வேல்டு 3-ம் பாகம் + "||" + Jurassic World Part 3

ஜுராசிக் வேல்டு 3-ம் பாகம்

ஜுராசிக் வேல்டு 3-ம் பாகம்
ஜுராசிக் வேல்டு படத்தின் 3-ம் பாகம் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் 1993-ம் ஆண்டு வெளியாகி உலகையே திரும்பி பார்க்க வைத்த படம் ஜுராசிக் பார்க். இந்த படத்தில் டைனோசர் மிருகங்களை கிராபிக்ஸில் தத்ரூபமாக காட்சிப்படுத்தி மிரட்டி இருந்தனர். வசூலிலும் சாதனை நிகழ்த்தியது. இதன் இரண்டாம் பாகம் 1997-ம் ஆண்டிலும், மூன்றாம் பாகம் 2001-ம் ஆண்டிலும் வெளியானது.

அதன் பிறகு ஜுராசிக் பார்க் படங்கள் தயாராகவில்லை. 2015-ல் ஜுராசிக் பார்க் படத்தின் தொடர்ச்சியாக ஜுராசிக் வேல்டு படம் வெளியானது. இந்த படத்தில் கிறிஸ் ப்ராட் நடித்து இருந்தார். கோலின் ட்ரெவாரோ இயக்கினார். இந்த படத்துக்கும் உலகம் முழுவதும் வரவேற்பு கிடைத்தது. ஜுராசிக் வேல்டு 2-ம் பாகம் 2018-ல் வெளியானது.

அடுத்து ஜுராசிக் வேல்டு படத்தின் 3-ம் பாகம் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து படத்தின் நாயகன் கிறிஸ் ப்ராட் கூறும்போது, “ஜுராசிக் வேல்டு மூன்றாம் பாகத்துக்கான கதையை இயக்குனர் கோலின் ட்ரெவாரோ எழுதிவிட்டார். கதை பிரமாதமாக வந்துள்ளது. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் எல்லா நடிகர்களும் இணைந்து நடித்ததுபோல் ஜுராசிக் வேல்டு மூன்றாம் பாகத்திலும் ஜுராசிக் பார்க் படங்களில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளும் நடிப்பார்கள் என்றார்”.

இந்த நிலையில் 3-ம் பாகத்தின் தலைப்பு ‘ஜுராசிக் வேல்டு டொமினியன்’ என்று அறிவித்து உள்ளனர். இந்த படம் அடுத்த வருடம் ஜூன் 11-ந்தேதி திரைக்கு வருகிறது.