20 வருடத்தில் எதுவும் மாறவில்லை திருமண வாழ்க்கை பற்றி குஷ்பு
குஷ்பு தனது 20-வது திருமண நாளை கொண்டாடி டுவிட்டரில் திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த், கமல்ஹாசனில் இருந்து அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தவர் குஷ்பு. தெலுங்கு, மலையாளத்திலும் பிரபல நடிகையாக திகழ்ந்தார். 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். 2000-ல் இயக்குனர் சுந்தர்.சியும், குஷ்புவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்று 2 மகள்கள். குஷ்பு தற்போது ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இன்னொரு புறம் அரசியல் பணிகளிலும் ஈடுபடுகிறார். தற்போது குஷ்பு தனது 20-வது திருமண நாளை கொண்டாடி டுவிட்டரில் திருமண புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
அதில் கணவர் சுந்தர்.சி பற்றி உருக்கமான பதிவையும் பகிர்ந்துள்ளார். “திருமணமான இந்த 20 ஆண்டுகளில் எதுவுமே மாறவில்லை. இப்போதும் நான் பேசிக்கொண்டே இருக்கிறேன். நீங்கள் புன்சிரிப்போடு கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். தனது சொந்த திருமணத்துக்கே தாமதமாக வந்த மணமகன் நீங்கள் மட்டும்தான். எனது வலிமையின் தூண் நீங்கள்தான்” என்று கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு குஷ்பு 25 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் என்னிடம் காதலை சொன்னீர்கள் என்று கூறி சுந்தர்.சியுடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதில் “உங்கள் கண்களை பார்க்கும்போது நீங்கள் இன்னும் என்னை வெட்கப்பட வைக்கிறீர்கள். உங்கள் சிரிப்பு என்னை பலகீனமடைய வைக்கிறது” என்று சுந்தர்.சி மீதான காதலை வெளிப்படுத்தி இருந்தார்.
Related Tags :
Next Story