கொரோனாவால் மம்முட்டி, மோகன்லால் படங்கள் பாதிப்பு


கொரோனாவால் மம்முட்டி, மோகன்லால் படங்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 12 March 2020 10:30 PM GMT (Updated: 12 March 2020 5:47 PM GMT)

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் மம்முட்டி, மோகன்லால் படங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

கொரோனா வைரஸ் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. திரையரங்குகளை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது. படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. மம்முட்டி, மோகன்லால் படங்கள் தாமதம் ஆகின்றன. மோகன்லால் நடித்து திரைக்கு வருவதாக இருந்த மரைக்காயர் அரபிக்கடலின்டே சிம்ஹம் படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த படத்தை தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. 16-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய குஞ்சாலி மரைக்காயர் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ளது.

இதில் குஞ்சாலி மரைக்காயர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். பிரபு, சுனில் ஷெட்டி, சித்தார்த், அசோக் செல்வன், மஞ்சுவாரியர், கீர்த்தி சுரேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. யுத்த காட்சிகள் மிரட்சியாக இருந்ததாக இந்தி நடிகர் அமிதாப்பச்சன் பாராட்டினார்.

இந்த படத்தை வருகிற 26-ந்தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்தனர். கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் படம் ரிலீசை தள்ளி வைத்துள்ளனர். இதுபோல் மம்முட்டி மஞ்சுவாரியர் நடிக்கும் த பிரீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக கொச்சியில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. கொரோனா காரணமாக இதன் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

Next Story