குருவியார் கேள்வி-பதில்கள்


குருவியார் கேள்வி-பதில்கள்
x
தினத்தந்தி 15 March 2020 8:42 AM GMT (Updated: 15 March 2020 8:42 AM GMT)

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி குருவியார், தினத்தந்தி, சென்னை-600007

குருவியாரே, விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் விஜய் சேதுபதி என்ன வேடத்தில் நடிக்கிறார்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

‘மாஸ்டர்’ படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். அவருடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதை பயன்படுத்திக்கொண்டு விஜய் சேதுபதி மிக சிறப்பாக நடித்து இருக்கிறாராம்!

***

‘கொடி’ படத்தில் வில்லியாக நடித்த திரிஷா, அதன்பிறகு வில்லி வேடத்தில் நடிக்கவில்லையே...ஏன்? (எஸ்.ராமமூர்த்தி, கொட்டிவாக்கம்)

தொடர்ந்து வில்லியாக நடித்தால், ‘பார்சல்’ செய்து அனுப்பி விடுவார்கள் என்று திரிஷாவுக்கு தெரியும். அதனால்தான் அவர் வில்லியாக தொடரவில்லை!

***

குருவியாரே, ஜெயம் ரவிக்கு மிக பொருத்தமான ஜோடி யார்? நயன்தாராவா, அனுஷ்காவா, திரிஷாவா, ஹன்சிகாவா? 4 பேரில் யார் கச்சிதமாக பொருந்துகிறார்கள்? (எம்.ஹம்சா முகைதீன், ஆம்பூர்)

திரிஷா பொருந்திய அளவுக்கு (சம்திங் சம்திங்) மற்ற மூன்று பேரும் பொருந்தவில்லை!

***

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் மூன்றாம் பாகம் தயாராகுமா? அதில் தனுஷ் நடிப்பாரா? (கே.பிரதாப், வேலூர்)

இப்போதைக்கு அப்படி ஒரு யோசனை டைரக்டர், நடிகர் ஆகிய இருதரப்பினரிடமும் இல்லை. தனுசுக்கு புதிய பட வாய்ப்புகள் வரிசையாக காத்திருப்பதால், ‘வேலையில்லா பட்டதாரி–3’ பற்றி அவர் இப்போதைக்கு பரிசீலிக்கவில்லை!

***

குருவியாரே, அஞ்சலி–ஜெய் ஆகிய இருவரும் சில சமயங்களில் காதலிப்பது போல் பேட்டி கொடுக்கிறார்கள். சில சமயங்களில் மோதுவது போல் பேட்டி அளிக்கிறார்கள். இரண்டு பேரும் காதலிக்கிறார்களா, இல்லையா? (ஆர்.ரவீந்தர், பாலக்காடு)

காதல்வசப்பட்ட நடிகைகள் யாரும் ‘‘இவரை காதலிக்கிறேன்’’ என்று உண்மையை ஒப்புக்கொள்வதில்லை. இது, கே.ஆர்.விஜயா காலத்தில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நாளை திருமணம் என்றால் இன்று வரை அதை மறுக்கும் நடிகர்களும் இருக்கிறார்கள். இதற்கு அஞ்சலி, ஜெய் இருவரும் விதிவிலக்கு அல்ல!

***

‘‘போதைக்கு அடிமையாகி மீண்டேன்’’ என்று விஷ்ணு விஷால் கூறுகிறாரே...அவர் அப்படி போதைக்கு அடிமையாக காரணம் என்ன? (டி.தனபால், மயிலாடுதுறை)

விஷ்ணு விஷால் காதல் திருமணம் செய்தவர். அவருக்கும், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவர் போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இப்போது அவர் போதைப்பழக்கத்தில் இருந்து மீண்டு விட்டாராம்!

***

குருவியாரே, பாவனா திருமணத்துக்குப்பின் நடிக்கிறாரா, இல்லையா? (கோ.ஜெயப்பிரகாஷ், காஞ்சிபுரம்)

சமந்தாவைப்போல் பாவனாவும் திருமணத்துக்குப்பின் நடித்து வருகிறார். சினிமாவை ஒருபோதும் அவர் கைவிட மாட்டாராம்!

***

‘தலைவி’ படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிப்பவர் யார்? (என்.மல்லிகா, திருவண்ணாமலை)

அரவிந்தசாமி!

***

குருவியாரே, சில நடிகர்–நடிகைகள், வெப் சீரியலில் விரும்பி நடிக்கிறார்களே...என்ன வி‌ஷயம்? (எம்.சாகுல் ஹமீது, சிட்லபாக்கம்)

‘வெப்’ தொடர்களை வருங்காலத்தில் தவிர்க்க முடியாது என்பதால், விவரம் தெரிந்த நடிகர்–நடிகைகள் ‘வெப்’ தொடர்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். டைரக்டர் தாமிரா இயக்கும் ஒரு வெப் தொடரில், சத்யராஜ் நடிக்கிறார். அதில் அவருக்கு ஜோடி, சீதா!

***

தமிழ் திரையுலக வரலாற்றில், மிக அதிக நாட்கள் ஓடிய படம் எது? அதில் கதாநாயகன் யார், கதாநாயகி யார், டைரக்டர் யார், தயாரிப்பாளர் யார்? படம் எத்தனை நாட்கள் ஓடியது? (இரா.பெரியசாமி, லால்குடி)

அதிக நாட்கள் ஓடிய படம், ‘சந்திரமுகி.’ கதாநாயகன், ரஜினிகாந்த். டைரக்டர், பி.வாசு. தயாரிப்பாளர், சிவாஜி பிலிம்ஸ். படம் 800 நாட்களை தாண்டி ஓடியது!

***

குருவியாரே, அஜித்குமார் படப்பிடிப்புகளின்போது அடிக்கடி விபத்துகளில் சிக்கிக் கொள்கிறாரே...என்ன காரணம்? (ஜே.சார்லஸ், தூத்துக்குடி)

‘‘கண் திருஷ்டி’’ என்று உறவினர் மற்றும் நண்பர்கள் கூறுகிறார்கள். ‘‘அதிரடி நாயகர்களுக்கு இதெல்லாம் ரொம்ப சகஜம்’’ என்கிறார்கள், படக்குழுவினர்!

***

எம்.ஜி.ஆர். அறிமுகம் செய்த அழகான நடிகைகளில் லதாவும் ஒருவர். அம்மா வேடங்களில் நடித்து வந்த அவரை சில வருடங்களாக காணவில்லையே...? (ஆர்.பாரதி, திண்டிவனம்)

லதா, பாட்டி வேடத்தில் ஒரு தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்!

***

குருவியாரே, கவிஞர் வைரமுத்து திரையுலகுக்கு வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது? அவர் அரசியலுக்கு வருவாரா? (கே.வீரபாண்டியன், குலசேகரபட்டினம்)

வைரமுத்து திரையுலகுக்கு வந்து 40 வருடங்கள் ஆகிறது. அடுத்த வருடம் அவருடைய அரசியல் பிரவேசம் நடந்தால், ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

***

கவர்ச்சியே இல்லாத ஆண்ட்ரியாவை ஒரு படத்தில் பார்க்க முடியுமா? (எம்.பிரேம்குமார், சேலம்)

ஆண்ட்ரியாவை அப்படி பார்க்க எந்த ரசிகரும் விரும்ப மாட்டார்! (உங்களை தவிர...)

***

குருவியாரே, ராகவா லாரன்ஸ் பேய்களை காட்டியே படங்களை ஓட வைத்து விடுகிறாரே? அவருக்கும், பேய்களுக்கும் என்ன ராசி? (சு.அசோக்ராஜ், தேவகோட்டை)

இருவருக்கும் இடையே எழுதப்படாத ஒரு ஒப்பந்தம். படம் வெற்றி பெற்றால் பேய்களுக்கு ‘விசே‌ஷ’ விருந்து கொடுப்பதாக...!

***

தனுசுக்கும், விஷாலுக்கும் என்ன வித்தியாசம்? (இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி)

தனுஷ் ஐந்தரை அடி. விஷால் ஆறு அடியை தாண்டியவர்!

***

குருவியாரே, ‘சின்னத்திரை’ புகழ் வாணி போஜனுக்கு பட வாய்ப்பு எப்படி உள்ளது? (கா.செந்தூர் ராஜன், விருதுநகர்)

வாணி போஜன் 2 புதிய படங்களுக்காக பேசப்பட்டு வருகிறார். அந்த 2 படங்களுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளிவரும்!

***

தெலுங்கு பட உலகில் நடிகர்–நடிகைகளுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறதாமே...அங்கு மட்டும் எப்படி முடிகிறது? (பெ.அழகன் மூர்த்தி, திருக்கோவிலூர்)

தமிழ் படங்களை விட, தெலுங்கு படங்கள் அதிக தொகைக்கு வியாபாரம் ஆகின்றன. அதனால் அங்கே அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது!

***

குருவியாரே, நடிகர்–டைரக்டர்–தயாரிப்பாளர் சசிகுமாரை அடையாளம் காட்டிய படம் எது? (கே.வின்சென்ட், மேட்டூர்)

சசிகுமாரை அடையாளம் காட்டிய படம், ‘சுப்பிரமணியபுரம்!’

***

சினிமாவில் இருந்து அரசியலுக்குப்போன நக்மா, இனிமேல் படங்களில் நடிப்பாரா? (எம்.அரவிந்த், புதுச்சேரி)

கொடுக்க வேண்டியதை கொஞ்சம் அதிகமாகவே கொடுத்தால், நிச்சயமாக நடிப்பாராம்!

***

Next Story