கல் எறிபவர்களும் உண்டு, வரவேற்பவர்களும் உண்டு: வாழ்க்கையில் நதியை போல் கடமையை செய்யவேண்டும் பட விழாவில் நடிகர் விஜய் பேச்சு


கல் எறிபவர்களும் உண்டு, வரவேற்பவர்களும் உண்டு: வாழ்க்கையில் நதியை போல் கடமையை செய்யவேண்டும் பட விழாவில் நடிகர் விஜய் பேச்சு
x
தினத்தந்தி 16 March 2020 12:46 AM GMT (Updated: 16 March 2020 12:46 AM GMT)

வாழ்க்கையில் நதியை போல் கடமையை செய்ய வேண்டும் என்று பட விழாவில் நடிகர் விஜய் பேசினார்.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி வில்லனாக வருகிறார். மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. விழாவுக்கு, ரசிகர்கள் அழைக்கப்படவில்லை. நடிகர்-நடிகைகள் மற்றும் மாஸ்டர் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர். விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது:-

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ரசிகர்கள் வரமுடியவில்லை என்ற வருத்தம் எனக்கு உள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஏற்கனவே நடந்த ஒரு விழாவில், அரங்கத்துக்கு வெளியே நடந்த விஷயங்கள்தான். இந்த விழாவை நடத்துவதற்கும் கூட அரை மனதோடுதான் ஒப்புக்கொண்டேன். இந்த படத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அவர் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறார். ஒரு நாள் அவரிடத்திலேயே, இந்த படத்தில் நடிக்க ஏன் ஒப்புக்கொண்டீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே ‘எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும்’ என்றார். விஜய் சேதுபதி சிறு, சிறு வேடங்களில் நடித்து இப்போது நல்ல நிலையில் இருக்கிறார். அவர் வில்லனாக இந்த படத்தில் நடிக்க அவசியம் இல்லை. ஆனாலும் நடிக்க ஒப்புக்கொண்டார். இதற்காக அவருக்கு நன்றி.

வாழ்க்கை என்பது நதி போன்றது. அதில் கல் எறிவார்கள். வரவேற்பார்கள். வணங்கவும் செய்வார்கள். இப்படி எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். ஆனாலும் நாம் நதி மாதிரி, கடமையை செய்துகொண்டே இருக்க வேண்டும். வாழ்க்கை குறுகியது. பிரச்சினைகள் வரும், போகும். அதுபற்றி எல்லாம் பொருட்படுத்தாமல் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.

எனக்கு ஒரு பிரச்சினை வந்ததும், ஏராளமானோர் திரண்டு வந்தனர். அதில் மறக்க முடியாத தருணம், எனது ரசிகர்கள் வேற லெவல். இந்த விழாவில் நான் அணிந்து வந்த ‘கோட்-சூட்’ அழகாக இருப்பதாக பேசினார்கள். நண்பர் அஜித் மாதிரி வரலாமே என்று, இந்த உடை அணிந்து வந்தேன்.

மக்களுக்கு எது தேவையோ, அதை சட்டமாக்க வேண்டும். மக்களை சட்டத்துக்குள் திணிக்கக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் விஜயிடம், நீங்கள் 20 வருடத்துக்கு முந்தைய வாழ்க்கைக்கு சென்றால், அப்போதைய விஜய்க்கு என்ன அறிவுரை சொல்வீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த விஜய், ரெய்டு எல்லாம் இல்லாத அமைதியான வாழ்க்கை வேண்டும் என்று கேட்பேன். இப்போதும் நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன். உண்மையாக இருக்கவேண்டும் என்றால் சில நேரம் ஊமையாகவும் இருக்க வேண்டும் என்று பதில் அளித்தார்.

பின்னர் விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதிக்கு, விஜய் முத்தம் கொடுத்தார். மேடையில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடவும் செய்தார். முன்னதாக படப்பிடிப்பில் விஜய்க்கு, விஜய் சேதுபதி முத்தம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story