ஹாலிவுட் கதாநாயகர்கள் : எல்விஸ் பிரஸ்லி


ஹாலிவுட் கதாநாயகர்கள் : எல்விஸ் பிரஸ்லி
x
தினத்தந்தி 20 March 2020 10:51 AM GMT (Updated: 20 March 2020 10:51 AM GMT)

மேலை நாட்டு சங்கீத மேதை, நடிகர், ராக்-இன்-ரோல் நடனத்தில் ஈடு இணை இல்லாதவர் என்று பெயர் பெற்றவர். அவர்தான் இளம் புயல் எல்விஸ் பிரஸ்லி.

1935-ம் வருடம் ஜனவரி மாதம் 8-ந் தேதி, அமெரிக்காவின் மிஸ்ஸிஸிபி மாகாணத்தில் உள்ள டூபிபோ என்னும் இடத்தில் பிறந்தார். இவரது பெற்றோருக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளில், எல்விஸ்தான் உயிர் பிழைத்தார். மற்றொரு குழந்தை இறந்தே பிறந்தது. பெற்றோர் இருவரும் அன்றாடம் வேலை செய்து பிழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர். தங்களுக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்றால், அடுத்தடுத்த ஊருக்குப் பயணமாகும் பழக்கம் அவர்களுடையது.

எல்விஸ், தன் பெற்றோர் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார். தாய், தந்தைக்கு அடுத்ததாக அவருக்கு மிகவும் பிடித்தது சங்கீதம். இளம் வயதில் இருந்தே அவரது கவனம் முழுவதும் சங்கீதத்திலேயே இருந்தது. அவர் படித்த பள்ளி ஒன்றில் சங்கீத போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்றார். அது அவரது சங்கீத ஆர்வத்திற்கு தூபம் போட்டது.

1953-ம் வருடம் படிப்பை முடித்துக் கொண்டு வெளியே வந்த எல்விஸ், பல இடங்களில் வேலை பார்த்து பணம் சம்பாதித்தார். அதன் மூலம் தன்னுடைய பெற்றோரை மகிழ்ச்சியாக பார்த்துக் கொண்டார். அதே நேரம் சங்கீதத்தில் இருந்து தன்னுடைய கவனம் திசை திரும்பாதபடியும் பார்த்துக் கொண்டார். தனது ஆழ்ந்த கவனம் மூலம் சங்கீதத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற எல்விஸ், சன் ஸ்டூடியோ ஒன்றில் தனது குரலை விமர்சனத்திற்காகப் பதிவு செய்தார்.

அந்தக் கம்பெனி முதலாளி, எல்விஸ் பிரஸ்லியின் குரலைக் கேட்டு மகிழ்ந்துபோனார். எல்விஸை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, பாடல்களை பதிவு செய்து ஒலிப்பதிவு தட்டுகளை வெளியிட்டார். அவரது குரலும், சங்கீத உச்சரிப்பும் மக்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால், ஒலித்தட்டுகள் நன்றாக விற்பனை ஆகின. 1954-ம் ஆண்டு ஒரு ஒலிநாடாவின் மூலமாகவே மாபெரும் பாடகராக பிரகாசித்தார், எல்விஸ் பிரஸ்லி.

தொடர்ந்து தன்னுடன் சிலரை சேர்த்துக் கொண்டு, மேடையில் நடனமாடியபடியே பாடினார். இது மக்களிடம் பிரமாதமான வரவேற்பைப் பெற்றது. அதே வருடம் ஆர்.சி.ஏ. ரிகார்டு கம்பெனி, தனது முதல் ஒலிநாடாவை எல்விஸ் பெயரில் வெளியிட்டது. எல்விஸ் முறைப்படி அந்தக் கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டதால், ஒலித்தட்டுகளின் விற்பனை அமோகமாக இருந்தது. இந்தக் கம்பெனியின் மானேஜர் கர்னல் டாம் பார்க்கர், வியாபார நுணுக்கங்களை நன்கு அறிந்தவர். ஆனால் இவ்வளவு விற்பனை இருக்கும் என்று கம்பெனியே எதிர்பார்க்கவில்லைதான்.

எல்விஸ் பிரஸ்லியின் கவர்ச்சியான இடுப்பு அசைவு களும், பாட்டும் பல டெலிவிஷன் ஷோக்களில் இடம் பெற்று அவரை மேலும் பிரபலமாக்கியது. ரேடியோ, டெலிவிஷன், வெள்ளித்திரை போன்ற எல்லா இடங்களிலும் பாடகராகவும், நடிகராகவும் அவர் உருவெடுத்தார். அவரது நடிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம், ‘லவ் மீ டென்டர்’ (Love Me Tender). 1956-ம் வருடம் வெளியான இந்தத் திரைப்படம், மிகவும் பெரிய வெற்றியைப் பெற்றது.

அந்த காலகட்டத்தில், நடிகர்கள் கட்டாயம் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற விதி இருந்தது. ஆனால் எல்விஸ் பிரஸ்லியின் புகழைக் கண்டு, ராணுவம் அவரை கட்டாயப்படுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் ராணுவத்தில் பணியாற்றுவதை, எல்விஸ் தவிர்க்கவில்லை. ‘நாட்டுக்காக சில காலம் சேவை செய்தால் என்ன?’ என்ற எண்ணம் உண்டானதால், ராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ஜெர்மனியில் ஒரு வருடம் ராணுவ சேவை செய்தார். மேலும் ஆறு மாதங்கள் அவருக்கு ராணுவப் பணி நீட்டிக்கப்பட்டபோது, ஐரோப்பாவில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவரது அன்புக்குரிய தாய் இறந்துபோனார். அதனால் விடுமுறை எடுத்துக் கொண்டு தாயின் இறுதிச்சடங்குகளை முறையாக செய்தார். பின்னர் மீண்டும் ராணுவப் பணியில் சேர்ந்தார்.

1960-ம் ஆண்டு, எல்விஸ் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். திரும்பி வந்தவுடன், தனது பாடும் தொழிலில் மும்முரமாக ஈடுபட்டார். அத்துடன் படங்களும், நடிப்பும் சேர்ந்து கொண்டது. 1961-ல் ‘புளு ஹவாய் (Blue Hawaii), 1962-ல் ‘கேர்ள்ஸ் கேர்ள்ஸ் கேர்ள்ஸ்’ (Girls! Girls! Girls!), 1964-ம் ஆண்டு ‘விவா லாஸ் வேகாஸ்’ (Viva Las Vegas) உள்பட நிறைய படங்கள் வெளியாயின. சில வெற்றி பெற்றாலும், சில நன்றாகப் போகவில்லை. ஆனால் அவரது பாடல்களுக்கு மட்டும் மவுசு குறையவே இல்லை.

‘படங்களில் ஏன் வெற்றிபெற முடியவில்லை?’ என்ற ஆதங்கம், எல்விஸ் பிரஸ்லிக்கு இருக்கத்தான் செய்தது. வாழ்க்கை நன்றாக போய் கொண்டிருந்த நிலையில், எல்விசின் மனைவி அவரை விட்டு பிரிந்தார். அந்த சோகத்திலேயே மீதி நாட்களை கழித்தவர், 1977-ம் ஆண்டு ஆகஸ்டு 16-ந் தேதி, இதயத்தில் ஏற்பட்ட வலியால் மரணித்தார்.

தன்னுடைய வாழ்நாள் முழுவதும், ராக் இன் ரோல் என்ற இசையை, அமெரிக்கா முழுவதும் பிரபலப்படுத்தினார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதற்காக மூன்று முறை ‘கிராமி கலர்ட்ஸ்’ என்ற உயரிய விருதைப் பெற்றார். ‘ராக் கண்டரோல்’ நடனத்தில் சிறந்தவர் எல்விஸ். இதனால் ராக் ரேஸ் கலைக்கூடத்தில் இடம்பெற்ற முதல் பெயராக இவரது பெயர் பதிவானது. இவர் மறைந்த பிறகும், உலகத்திலேயே சங்கீத உலகில் நிரந்தரமாக இடம் பெற்றவர் என்று புகழோடு இவரைப் பற்றிய பல செய்திகளும், படங்களும் தொடர்ச்சியாக வந்து கொண்டு இருந்தன. இவரைப் போலவே உருவம் கொண்ட சில நடிகர்கள் 2005 டெலிவிஷன்களின் நாடகங்களிலும், பாடல்களிலும் நடித்து மக்களுக்கு பிரஸ்லி என்ற ஒருவர் இறக்கவில்லை என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தனர். இன்னும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.

வாழ்வை புரட்டிப்போட்ட பிரிவு

ஜெர்மனி ராணுவ முகாமில் இருந்தபோது, எல்விஸ் மனதில் முதன் முதலாக காதல் தோன்றியது. ஒரு இளம் பெண்ணை நெருக்கத்தில் சந்தித்து பேசியதால் தோன்றிய மாறுதல் அது. பிரிஸ்சில்லா பியூலி என்ற அந்தப் பெண்ணையே, 1967-ல் மணம் செய்துகொண்டார். மறுவருடமே அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன் பெயர் ‘லிசா மேரி.’

வாழ்க்கை எப்போதும் நம்மை இன்பமாகவே வாழவிட்டு விடுவதில்லை. நன்றாக சென்று கொண்டிருந்த வாழ்வில் புயல்வீசியது. 1973-ல் கணவனும் மனைவியும் பிரிந்தார்கள். குழந்தையை தாய் வசம் ஒப்படைத்தது நீதிமன்றம். அதுதான் பிரஸ்லியின் வாழ்வில் பெரிய சோகத்தை உண்டாக்கியது. அதன்பிறகான அவரது நடவடிக்கைகள் முற்றிலும் மாறிவிட்டது. இடைவிடாமல் குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார். ஒரு முறை மேடையில் பாடிக்கொண்டே ஆடியபோது, நிலைதடுமாறி விழுந்தார். அதிக மது பழக்கம்தான் அதற்கு காரணம் என்றனர் மருத்துவர்கள்.

உடல்நிலை சற்று தேறியவுடன், தனது கோஷ்டியுடன் மீண்டும் மேடைகளில் பாட ஊர் ஊராகச் செல்ல ஆரம்பித்தார். 1977-ம் வருடம் ஒரு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, கிரேஸ்லேண்ட் என்ற இடத்தில் இருந்த தனது மாளிகைக்கு திரும்பினார். அங்குதான் அவருக்கு இதயத்தில் வலி உண்டாகி, மரணம் சம்பவித்தது. அந்த மாளிகைக்குள், தன் தாயின் கல்லறை அருகிலேயே, அவரும் அடக்கம் செய்யப்பட்டார். அவரது தந்தை உள்ளிட்ட அனைத்து சொந்தங்களும் அங்கேதான் சமாதி வைக்கப்பட்டனர்.

எல்விஸ் மரணத்திற்குப் பிறகு, அவரது வீடு மக்களின் பார்வைக்காக திறந்துவிடப்பட்டது. அது ஒரு ஞாபகச் சின்னமாக மாறிப்போனது. ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளில் இங்கு வருபவர்களின் எண்ணிக்கை அபரிமிதமானது. 2012-ம் ஆண்டில் அவரது மனைவியும், மகளும் கூட வந்திருந்து கவுரவித்தார்கள்.

அப்போது அவரது மகள் லிசா மேரி, “இது மறக்க முடியாத நாள் என்பதை யாராலும் தவிர்க்க முடியாது. தனக்கு இப்படியொரு மரியாதை தரப்படும் என்று, என் தந்தை கூட நினைத்திருக்க மாட்டார். இது ஒரு கலைஞனுக்கு மக்கள் தரும் மரியாதை” என்று கூறினார்.

Next Story