கணவருக்கு சளி, காய்ச்சல் இருந்ததால் தனிமைப்படுத்திக்கொண்ட நடிகை ஸ்ரேயா + "||" + Shriya Saran Shares Her Experience About Husband Having Covid-19 Like Symptoms
கணவருக்கு சளி, காய்ச்சல் இருந்ததால் தனிமைப்படுத்திக்கொண்ட நடிகை ஸ்ரேயா
கணவருக்கு சளி, காய்ச்சல் இருந்ததால் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக நடிகை ஷ்ரேயா தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா, சில வருடங்களுக்கு முன்பு ரஷ்ய தொழில் அதிபர் ஆண்ட்ரி கோச்சேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் வசித்து வருகிறார். அந்த நாட்டிலும் கொரோனாவுக்கு ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்துள்ளதால், சமூக விலகலை கடைப்பிடிக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால் வீட்டில் முடங்கி உள்ள ஸ்ரேயா கணவர் பாத்திரங்களை கழுவி, வீட்டு வேலைகள் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில் கொரோனாவால் தங்களுக்கு எப்படிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதை ஸ்ரேயா வெளிப்படுத்தி உள்ளார். அவர் கூறியதாவது:-
“நானும், எனது கணவரும் திருமண நாள் விழாவை கொண்டாட ஒரு ஓட்டலுக்கு செல்ல முடிவு செய்து முன்பதிவும் செய்தோம். அங்கு சென்றபோது அது மூடி இருந்தது. சுற்றிலும் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. தொடர்ந்து சில நாட்களில் ஸ்பெயின் முழுவதும் ஊரடங்குக்குள் வந்தது. முக்கிய தேவைகள் இருந்ததால் ஒருவர் மட்டும் வீட்டில் இருந்து வெளியே வரலாம் என்று போலீசார் கட்டுப்பாடுகள் விதித்தனர். ஒரு கட்டத்தில் கணவர் ஆண்ட்ரிக்கு காய்ச்சலும், இருமலும் ஏற்பட்டது.
உடனே ஆஸ்பத்திரிக்கு சென்றோம். மருத்துவர்கள் உங்கள் கணவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. உடனே வீட்டுக்கு செல்லுங்கள். இங்கு இருந்தால் கொரோனா தொற்று வந்துவிடும் என்றனர். உடனே வீட்டுக்கு வந்து இருவரும் தனிமைப்படுத்திக்கொண்டோம். தனித்தனி படுக்கை அறைகளை பயன்படுத்தினோம். வீட்டில் சமூக விலகலை கடைப்பிடித்தோம். இப்போது நன்றாக இருக்கிறோம். தினமும் யோகா தியானம் செய்கிறேன். எனது பெற்றோர் மும்பையில் இருக்கின்றனர்”. இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.