கொரோனா ஆபத்தை உணராமல் சுற்றும் கோமாளிகள்; நடிகர் சல்மான்கான் சாடல்


கொரோனா ஆபத்தை உணராமல் சுற்றும் கோமாளிகள்; நடிகர் சல்மான்கான் சாடல்
x
தினத்தந்தி 18 April 2020 5:43 AM GMT (Updated: 2020-04-18T11:13:03+05:30)

கொரோனா ஆபத்தை உணராமல் சுற்றும் கோமாளிகள் என நடிகர் சல்மான்கான் சாடியுள்ளார்.

மும்பை,

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. ஆனால் இதையும் மீறி மக்கள் வெளியில் நடமாடுகிறார்கள். சந்தைகளிலும் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் திரளுகிறார்கள்.

இந்தி நடிகர் சல்மான்கான் ஊரடங்கில் வெளியில் சுற்றுபவர்களை கடுமையாக கண்டித்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசி இருப்பதாவது:-

“கொரோனா பரவலை தடுக்க அனைவரும் வெளியில் சுற்றாமல் குடும்பத்தோடு வீட்டில் இருங்கள் என்று அரசாங்கம் வற்புறுத்தி உள்ளது. அதை ஏற்று செயல்படுங்கள், அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டுமென்றால் மட்டும் முக கவசம் அணிந்து வெளியே செல்லுங்கள்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் கடுமையாக உழைக்கிறார்கள். அவர்களுக்கு மரியாதை கொடுத்து வீட்டிலே இருங்கள். உங்கள் குடும்பத்தை கொரோனாவுக்கு பலி கொடுக்க வேண்டுமென்றால் வெளியே வாருங்கள். 

மக்களை காப்பாற்ற போராடும் போலீசார் மீது சிலர் கல் வீசுகின்றனர். கொரோனா நோய் இருப்பவர்கள் தப்பி ஓடுகிறார்கள். இவர்கள் ஆபத்தை உணராமல் சாவை நோக்கி செல்கின்றனர். வெளியே அலையும் கோமாளிகளால் இந்தியாவில் நீண்ட காலம் வீட்டிலேயே உட்கார வேண்டிய நிலை உள்ளது. ராணுவம் வந்தால்தான் இவர்களை திருத்த முடியும் என்ற நிலைமை ஏற்பட வேண்டாம்.”

இவ்வாறு சல்மான்கான் கூறினார்.

Next Story