நலிந்த நடிகர்களுக்கு உதவ நிதி தாருங்கள் நடிகர் நாசர் அறிக்கை


நலிந்த நடிகர்களுக்கு உதவ நிதி தாருங்கள் நடிகர் நாசர் அறிக்கை
x
தினத்தந்தி 19 April 2020 5:44 AM GMT (Updated: 2020-04-19T11:14:09+05:30)

நலிந்த நடிகர்களுக்கு உதவ நிதி தாருங்கள் என நடிகர் நாசர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“கொரோனா தொற்றால் நாடெங்கும் முடங்கி கிடக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள திரைப்பட நலவாரிய அமைப்பு உறுப்பினர்கள் அனைவருக்கும் தலா ரூ.1,000 உதவி வழங்கிட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழக அரசுக்கு கோடான கோடி நன்றி.

நடிகர் சங்கத்திற்கு, பல்வேறு தரப்பிலிருந்தும் நிதி உதவிகளையும், பொருள் உதவிகளையும் அளித்து வருகிறார்கள். ராகவா லாரன்ஸ் ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கி சிறப்பு செய்துள்ளார். பொதுவாக இந்த மூன்று மாதங்கள்தான் நாடகங்கள் அதிகம் நடத்தப்படும். அவர்களின் வாழ்வாதாரம் இப்பொழுது கேள்விக்குறியாக உள்ளது. நாடகம் மற்றும் படப்பிடிப்பு நடைபெற இன்னும் எத்தனை மாதங்கள் ஆகும் என்று தெரியவில்லை. அவர்களுக்கு உதவ நிதி உதவி அதிகம் தேவைப்படுகிறது.

ஆகவே, நலிந்த நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்களுக்கு உதவ அனைவரும் தம்மால் இயன்ற நிதி உதவியை நடிகர் சங்கத்தின் மூலம் அளிக்க வேண்டுகிறோம். நாம் அவர்களின் பசியைப் போக்கிடுவோம். வீட்டிலிருங்கள்... தனித்திருங்கள்... கொரோனாவை ஒழிப்போம்.”

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Next Story