அமெரிக்காவில் சிக்கி தவிக்கும் நடிகை


அமெரிக்காவில் சிக்கி தவிக்கும் நடிகை
x
தினத்தந்தி 20 April 2020 5:28 AM GMT (Updated: 2020-04-20T10:58:53+05:30)

அமெரிக்காவில் கொரோனா ஊரடங்கால் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருவதாக இந்தி நடிகை சவுந்தர்யா சர்மா தெரிவித்துள்ளார்.

நியூயார்க்,

நடிகர் பிரித்விராஜ் மலையாள படப்பிடிப்புக்காக ஜோர்டானுக்கு சென்று, கொரோனா ஊரடங்கால் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார். அங்குள்ள பாலைவன பகுதியில் தங்கி இருக்கும் அவர் நல்ல உணவு கிடைக்காமல் கஷ்டப்படுவதாக தெரிவித்துள்ளார். அவரை மீட்டு வருவது தற்போதைய சூழ்நிலையில் இயலாத காரியம் என்று கேரள அரசு கைவிரித்து விட்டது.

இதுபோல் அமெரிக்கா சென்ற பிரபல இந்தி நடிகை சவுந்தர்யா சர்மா, இந்தியா திரும்ப முடியாமல் தவிப்பதாக தெரிவித்துள்ளார். இவர் அனுபம் கேர் தயாரித்த ‘ராஞ்சி டைரிஸ்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்றார். பட தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.

தனது புதிய பட வேலைகளுக்காக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிலிம் அகாடமியில் நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ள சென்றிருந்தார். கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் இந்தியா திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கி கொண்டார்.

அவர் கூறும்போது, “நானும், மேலும் 400 மாணவர்களும் இங்கு சிக்கி இருக்கிறோம். இந்திய தூதரகம் எந்த உதவியும் செய்யவில்லை. தங்குமிட வசதிகள் இல்லாமல் தவிக்கிறோம். கஷ்டமான நிலையில் இருக்கிறோம். நாங்கள் நாடு திரும்ப மத்திய அரசு சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Next Story