கொரோனாவால் குடும்பத்தை பிரிந்து தவிக்கிறேன் - நடிகர் சஞ்சய்தத்


கொரோனாவால் குடும்பத்தை பிரிந்து தவிக்கிறேன் - நடிகர் சஞ்சய்தத்
x
தினத்தந்தி 21 April 2020 4:43 AM GMT (Updated: 2020-04-21T10:13:01+05:30)

கொரோனாவால் குடும்பத்தை பிரிந்து தவிக்கிறேன் என நடிகர் சஞ்சய்தத் கூறியுள்ளார்.

மும்பை,

பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் ஏற்கனவே குடும்பத்தை பிரிந்து ஜெயிலில் நீண்ட நாட்களை கழித்தார். இப்போது கொரோனா ஊரடங்கிலும் குடும்பத்தை பிரிந்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

ஊரடங்கு அறிவிக்கும் முன்பே எனது மனைவி மான்யதா மற்றும் குழந்தைகள் துபாய்க்கு சென்று விட்டதால், இந்தியா திரும்ப முடியவில்லை. எனது வாழ்க்கையில் நடந்த சில விரும்பத்தகாத சம்பவங்களால் குடும்பத்தை விட்டு ஏற்கனவே விலகி இருந்தேன். 

இப்போது ஊரடங்கு சமயத்திலும் மீண்டும் அவர்களை பிரிந்து இருக்கிறேன். அவர்களோடு சேர்ந்து இருக்க முடியாமல் போனது வருத்தமாக உள்ளது. வீடியோ அழைப்புகள் மூலம் அவர்களை என்னால் பார்க்கவும், பேசவும் முடிகிறது.

ஆனால் கம்ப்யூட்டரில் பார்ப்பதற்கும், அவர்களோடு ஒன்றாக சேர்ந்து இருந்து நேரத்தை கழிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஒரு தந்தையாக, கணவனாக அவர்கள் எப்படி இருக்கிறார்களோ? என்ற கவலை எனக்கு இருக்கிறது. ஊரடங்கு முடியும் நாட்களை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன். 

குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை ஏற்கனவே அனுபவித்து விட்டேன். இப்போது இயற்கை இன்னொரு முறை பிரிவை கற்றுக்கொடுக்கிறது. நாம் நேசித்தவர்களுடன் சேர்ந்து வாழும்போது கழித்த நாட்கள் எவ்வளவு மதிப்பு மிக்கவை என்பதை இந்த மாதிரி நாட்களில்தான் உணர முடிகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story