மட்டமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் - ராஜ்கிரண் வேதனை


மட்டமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் - ராஜ்கிரண் வேதனை
x
தினத்தந்தி 21 April 2020 9:59 AM GMT (Updated: 21 April 2020 9:59 AM GMT)

எவ்வளவு மட்டமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது, மனம் மிகுந்த வேதனைக்குள்ளாகிறது என நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை அண்ணாநகரில் கொரோனா வைரசால் உயிரிழந்த டாக்டரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், ஆம்புலன்ஸ் வாகனம் மீது கல்வீசி தாக்கினர். இதில் 5 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் கொலை முயற்சி, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், தாக்குதல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பெண் உள்பட 21 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டாக்டரின் உடலை அந்த கல்லறையில் அடக்கம் செய்தனர்.

கடந்த வாரம் இதேபோல் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த ஆந்திர மாநில டாக்டரின் உடலை எரிக்க அம்பத்தூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உடலை திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

உயிருடன் இருக்கும் போது டாக்டர்களை கடவுளாக பார்க்கும் பொதுமக்கள், கொரோனாவால் உயிரிழந்த டாக்டர்களின் உடலை கூட தங்கள் பகுதியில் புதைக்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில், மிக சிறந்த குணச்சித்ர நடிகரான ராஜ்கிரண் பேஸ்புக்கில் பதிவிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

எவ்வளவு மட்டமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது, மனம் மிகுந்த வேதனைக்குள்ளாகிறது.

தம் மனைவி, குழந்தைகள், குடும்பத்தினர் யாரைப் பற்றியும் கவலைப்படாமல், "தான் படித்தது மக்களை காப்பாற்றுவதற்கே என்ற ஒரே லட்சிய கனவோடு, சமூகப் பொறுப்புணர்வோடு, தம் உயிரையும் பணயம் வைக்கும் புனிதமான மருத்துவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு இது தான் என்றால், இஸ்லாமியனாக பிறந்த ஒரே காரணத்தால், வெறும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்த ஒரு மாற்றுத்திறனாளி சிறுவனின் உடலை, புதைக்க விடமாட்டோம் என்று அடாவடி பண்ணிய அரசியல் கட்சிகள் வைத்தது தான், இந்த நாட்டில் சட்டம், என்றால், உலக நாடுகளின் பார்வையில், நம் நாடும், தேசமும் மிகவும் வெட்கக்கேடானதாக இருக்கும்.

இதைப்போன்ற கொடுமைகளுக்கு கடுமையான  நடவடிக்கைகள் எடுக்காத ஆட்சியாளார்கள், மிகவும் கண்டித்தக்கவராக கருதப்படுவர்.

இவ்வாறு ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

Next Story