பெப்சி தொழிலாளர்களுக்கு கங்கனா ரனாவத் ரூ. 5 லட்சம் நிதியுதவி!


பெப்சி தொழிலாளர்களுக்கு கங்கனா ரனாவத் ரூ. 5 லட்சம் நிதியுதவி!
x
தினத்தந்தி 21 April 2020 12:29 PM GMT (Updated: 21 April 2020 12:29 PM GMT)

பெப்சி தொழிலாளர்களுக்கு கங்கனா ரனாவத் ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.

மும்பை,

கொரோனா பரவல் தடுப்புக்கான ஊரடங்கினால் வருமானம் இன்றி தவிக்கும் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது. சினிமா தொழிலாளர்கள் சங்கத்தில் 25 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர் என்றும், அவர்களுக்கு உதவ ரூ.3.75 கோடி தேவைப்படுகிறது என்றும், எனவே நடிகர்-நடிகைகள் அனைவரும் நிதி வழங்க வேண்டும் என்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இதனை ஏற்று நடிகர்கள் பலர் நிதி வழங்கி உள்ளனர். இதுவரை ரூ.2 கோடியே 45 லட்சம் வசூலாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடிகை நயன்தாராவும் நிதி கொடுத்துள்ளார். மும்பை நடிகையான காஜல் அகர்வால் தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.2 லட்சமும், தமிழ் சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்கி உள்ளார். ஆனாலும் இந்த நிவாரணம் போதுமானதாக இல்லை என செல்வமணி மீண்டும் உதவி கோரியுள்ளார்.

இந்நிலையில், பெப்சி தொழிலாளர்களுக்கும் தலைவி படத்தின் தினக்கூலித் தொழிலாளர்களுக்கும் நடிகை கங்கனா ரனாவத் ரூ. 5 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.

இந்தி நடிகை கங்கனா ரனாவத் இதுவரை ஒரே ஒரு தமிழ்ப் படத்தில் மட்டுமே நடித்துள்ளார். 2008-ல் வெளியான தாம் தூம் படத்தில் அவர் நடித்திருந்தார். அடுத்ததாக தலைவி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கங்கனா ரனாவத் பிரதமர் கேர்ஸ் நிதிக்கு ரூ .25 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.அதோடு மட்டுமல்லாமல்,  கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் தினக்கூலித் தொழிலாளர்களுக்கும் உணவு தானியங்கள் மற்றும் மளிகைப் பொருட்களையும் நன்கொடையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Next Story