வீட்டுவேலை, சமையல் ரஜினிக்கு சவால் விடுத்த சிரஞ்சீவி


வீட்டுவேலை, சமையல் ரஜினிக்கு சவால் விடுத்த சிரஞ்சீவி
x
தினத்தந்தி 24 April 2020 5:00 AM GMT (Updated: 2020-04-24T10:30:10+05:30)

ரஜினிகாந்த் வீட்டு வேலைகள் செய்து வீடியோ வெளியிடுவாரா? என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

சென்னை,

கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நின்று போய், நடிகர்-நடிகைகள் ஒரு மாதமாக வீட்டில் முடங்கி உள்ளனர். உடற்பயிற்சி, வீட்டு வேலைகள் செய்தல், துணி துவைத்தல், ருசியான உணவுகள் சமைத்தல், வளர்ப்பு பிராணிகளை கொஞ்சுதல் என்று நேரத்தை கழிக்கிறார்கள். இதனை வீடியோவில் பதிவு செய்தும் வெளியிடுகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா கடந்த 19-ந்தேதி டுவிட்டரில் புதிய ஹேஷ்டேக்கை உருவாக்கி, வீட்டில் மனைவிக்கு உறுதுணையாக வீட்டு வேலைகள் செய்து வீடியோ வெளியிட வேண்டும் என்று பிரபல இயக்குனர் ராஜமவுலிக்கு சவால் விடுத்தார்.

இந்த சவாலை ஏற்ற ராஜமவுலியும் வீட்டு வேலைகள் செய்த வீடியோவை வெளியிட்டு தெலுங்கு நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு சவால் விடுத்தார். அவர்களும் வீட்டை சுத்தம் செய்து வீடியோக்கள் வெளியிட்டனர். இதில் ஜூனியர் என்.டி.ஆர், நடிகர் சிரஞ்சீவிக்கு சவால் விடுத்தார்.

இந்த சவாலை ஏற்ற சிரஞ்சீவியும் வீட்டை சுத்தம் செய்தார், சமையலறைக்கு சென்று தோசை சுட்டு அம்மாவுக்கு வழங்கினார். அந்த வீடியோவை அவர் டுவிட்டரில் வெளியிட்டு, அதோடு இந்த சவாலை எனது நண்பர் நடிகர் ரஜினிகாந்துக்கு விடுக்கிறேன் என்றார். இதனை ஏற்று ரஜினிகாந்த் வீட்டு வேலைகள் செய்து வீடியோ வெளியிடுவாரா? என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story