ரஜினிகாந்த் உதவி: பெருந்தன்மையாக இருக்கலாம்; உதவியை நாங்கள் எப்படி சொல்லாதிருப்பது - பேரரசு


ரஜினிகாந்த் உதவி: பெருந்தன்மையாக இருக்கலாம்; உதவியை நாங்கள் எப்படி சொல்லாதிருப்பது - பேரரசு
x
தினத்தந்தி 24 April 2020 7:46 AM GMT (Updated: 24 April 2020 7:46 AM GMT)

ரஜினிகாந்த் உதவியது பெருந்தன்மையாக இருக்கலாம் பெற்ற உதவியை நாங்கள் எப்படி சொல்லாதிருப்பது என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

சென்னை,

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் திரைப்பட தொழிலாளர்கள், துணை நடிகர்-நடிகைகள், நாடக நடிகர்கள், உதவி இயக்குனர்கள் வருமானம் இன்றி கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கு நடிகர்-நடிகைகள் பலர் நிதி மற்றும் உதவி பொருட்களை வழங்கி வருகிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்த், திரைப்பட தொழிலாளர்கள் சங்கமான ‘பெப்சி’க்கு ஏற்கனவே ரூ.50 லட்சம் நிதி வழங்கினார். தற்போது பல்வேறு சினிமா சங்கங்களுக்கும் உதவிகள் வழங்கி உள்ளார். தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் 1,500 பேருக்கு உதவும் வகையில் 2 லாரிகளில் அரிசி மூட்டைகள் மற்றும் மளிகை பொருட்களை அனுப்பி உள்ளார். நலிந்த இயக்குனர்கள் மற்றும் துணை, இணை இயக்குனர்களுக்கு இவை வழங்கப்பட உள்ளன. 

 அவர் செய்த இந்த உதவிக்கு இயக்குனர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்தநிலையில் இயக்குனர் பேரரசு டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கின் காரணமாக எங்கள் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க உறுப்பினர்கள் பலரின் வாழ்வாதாரம் பாதித்திருப்பதை மனதில் கொண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கருணை உள்ளத்தோடு எங்கள் உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் அரசி மூட்டையும்,மளிகை பொருட்களும் வழங்கியள்ளார். ரஜினி சாரின் கட்டளையை மீறிவிட்டோம்!

இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசிமூட்டை,மளிகைப் பொருட்கள் வழங்கும் போது "பத்திரிகைகளை அழைக்கவோ, செய்தி கொடுக்கவோ வேண்டாம் "என்ற நிபந்தனையோடுதான் கொடுத்தார். அது அவரின் பெருந்தன்மையாக இருக்கலாம் பெற்ற உதவியை நாங்கள் எப்படி சொல்லாதிருப்பது!

என பதிவிட்டுள்ளார்.

Next Story