சினிமா செய்திகள்

புகழைப் பயன்படுத்தி நாட்டில் வெறுப்பை விதைக்கிறார்: நடிகை கங்கனா ரனாவத் மீது பரபரப்பு புகார் + "||" + Police complaint against Kangana Ranaut over her video supporting Rangoli Chandel

புகழைப் பயன்படுத்தி நாட்டில் வெறுப்பை விதைக்கிறார்: நடிகை கங்கனா ரனாவத் மீது பரபரப்பு புகார்

புகழைப் பயன்படுத்தி நாட்டில் வெறுப்பை விதைக்கிறார்:  நடிகை கங்கனா ரனாவத் மீது பரபரப்பு புகார்
தனது புகழை பயன்படுத்தி சகோதரிக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்த நடிகை கங்கனா ரனாவத் எதிராக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மும்பை,

இந்தி நடிகை கங்கனா ரனாவத்  தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்திருந்தார். இப்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான 'தலைவி' யில் நடித்து வருகிறார்.

இந்தி சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே, தனு வெட்ஸ் மனு, ஃபேஷன், குயின் ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக மூன்று தேசிய விருதுகளை கங்கனா ரனாவத் பெற்றுள்ளார். 

இவரது சகோதரி ரங்கோலி. கங்கனாவின் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள கணக்குகளை கவனித்து வருவதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் அவர் பதிவிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. மொராதாபாத்தில் கொரோனா வைரஸ் சோதனைக்காகச் சென்ற சுகாதாரத்துறை பணியாளர்கள், காவலர்கள் தாக்கப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ரங்கோலி கடுமையாக விமர்சித்து டுவிட் செய்திருந்தார். அதில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் தாக்கிப் பதிவிட்டதாக, புகார் எழுந்தது. இதையடுத்து சினிமா பிரபலங்கள், நெட்டிசன்கள் அவரது டுவிட்டுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். அவர்கள் அளித்த புகாரை அடுத்து ரங்கோலியின் டுவிட்டர் கணக்கை நிறுவனம் சஸ்பெண்ட் செய்தது. இதனை கண்டித்து தனது சகோதரிக்கு ஆதரவாக கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மும்பையை சேர்ந்த அலி காஷிஃப் கான் தேஷ்முக் என்ற வழக்கறிஞர், போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், ஒரு சகோதரி கொலைகளுக்கும் வன்முறைக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அடுத்த சகோதரி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நாடு தழுவிய விமர்சனங்கள் மற்றும் அவரது டுவிட்டர் கணக்கை நிறுத்தி வைத்திருந்த போதிலும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

சொந்த ஆதாயங்களுக்காக, தனது புகழைப் பயன்படுத்தி நாட்டில் வெறுப்பை விதைக்கிறார், ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகிறார், அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.