மனிதநேயங்கள் ஒன்று சேரனும்; மருத்துவ உலகம் தலையோங்கி நிக்கணும் - நடிகர் வடிவேல்


மனிதநேயங்கள் ஒன்று சேரனும்; மருத்துவ உலகம் தலையோங்கி நிக்கணும் - நடிகர் வடிவேல்
x
தினத்தந்தி 24 April 2020 11:30 AM GMT (Updated: 24 April 2020 11:30 AM GMT)

மனிதநேயங்கள் ஒன்று சேரனும், மருத்துவ உலகம் தலையோங்கி நிக்கணும் என நடிகர் வடிவேல் கூறியுள்ளார்.

சென்னை,

உயிர்க்கொல்லி வைரசான கொரோனா கிட்டத்தட்ட உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டம் காண வைத்துவிட்டது. இன்றளவும் இந்த தொற்று நோயை குணப்படுத்த தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த வைரஸ் பிடியில் இருந்து தற்காத்துக்கொள்ள சமூக விலகல் மட்டுமே கை கொடுக்கும் என்பதால் இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. 

ஆனால் கொரோனா வழி மேல் விழி வைத்து காத்துக்கொண்டிருந்து, வீட்டில் இருந்து வெளியேறுபவர்களை குறிவைத்து தொற்றிக்கொள்கிறது. இதனால் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

இந்நிலையில், அவர் டுவிட்டரில் பதிவிட்ட ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது : 

உண்மையிலேயே போர் தான் இப்போது நடக்கிறது. எவனோ இப்படி ஒரு வேலை பார்த்துவிட்டான். உயிர்கள் எல்லாம் சாகணும், கட்டிடம், கார், வீடு வாசல் மட்டும் இருக்கணும். அப்படி செய்துள்ளார்கள்.  எவன் பார்த்த வேலையோ. இதிலிருந்து நாம் தப்பிக்க வேண்டும். உலக நாடுகள் எல்லாம் அணு குண்டுகளை புதைத்து விட்டு மனித நேயங்களை ஒன்று சேர்க்க வேண்டும். மருத்துவ உலகம் தலையோங்கி நிற்க வேண்டும். மருத்துவ உலகம் திணறுகிறது. அவர்கள் சொல்வதைக் கேட்டால் போதும். மருத்துவர்கள் நமக்கு கடவுள்கள். இப்போது கோட்டை தாண்டி வரக்கூடாது, ரோட்டைத்தாண்டி வரக்கூடாது, வீட்டை தாண்டி எதையும் தாண்டி வரக்கூடாது என்கிறார்கள். என்ன ஒரு சேட்டை. கேட்க மாட்டேங்குதுங்க இந்த பயபுள்ளைக. இந்த நேரத்தில் பிள்ளைகளுக்கு நாம் கொடுக்கும் பாடம் காலங்காலத்திற்கும் அவர் மனதில் நிற்கும். பிள்ளைகளை வளர்க்க நல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

வெளியே பூச்சி இருக்கிறது. கை கொடுக்ககூடாது. முத்தம் கொடுக்கக்கூடாது. யாரும் முத்தம் கொடுத்தாலும் நாம் வாங்கக்கூடாது.

கைகளை சுத்தமாக கழுவ சொல்லிக் கொடுங்கள். பிற்காலத்திற்கு அவர்கள் டாக்டர்களாக வந்தாலும் சரி, நாட்டையே ஆள்பவராக இருந்தாலும் சரி குழந்தைகளுக்கு ஒரு பாடம் தானே. சரியான சந்தர்ப்பத்தை கடவுள் கொடுத்திருக்கிறார். இதை வைத்து குழந்தைகளை நல்லப்படியாக வளர்த்துவிட வேண்டும்.

இவ்வாறு வடிவேலு கூறியுள்ளார்.


Next Story