கொரோனா பாதிப்பினால் மலையாள நடிகர்கள் சம்பளம் பாதியாக குறைப்பு?


கொரோனா பாதிப்பினால் மலையாள நடிகர்கள் சம்பளம் பாதியாக குறைப்பு?
x
தினத்தந்தி 25 April 2020 4:45 AM GMT (Updated: 25 April 2020 4:45 AM GMT)

கொரோனா பாதிப்பினால் மலையாள நடிகர்கள் சம்பளத்தை பாதியாக குறைத்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம்,

கொரோனா ஊரடங்கினால் சினிமா உலகம் முற்றிலுமாக முடங்கி உள்ளது. ஏற்கனவே திரைக்கு வர தயாராக இருந்த முன்னணி நடிகர்களின் படங்கள் நின்றுபோய் உள்ளன. ஊரடங்கு முடிந்த பிறகும் திரையரங்குகளில் படம் பார்க்க கூட்டம் வருமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மலையாள நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தை பாதியாக குறைத்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு உள்ளது.

மலையாளத்தில் ஈஸ்டர், ரம்ஜான் பண்டிகைகளில் 7 புதிய படங்களை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்தனர். அவைகள் கொரோனாவால் நின்று போய் உள்ளன. மேலும் தயாரிப்பில் இருந்த 30-க்கும் மேற்பட்ட படங்கள் முடங்கி உள்ளன.

இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் சுரேஷ்குமார் கூறும்போது, “கொரோனா பாதிப்பில் இருந்து திரையுலகம் எப்போது மீளும் என்று தெரியவில்லை. எனவே ஊரடங்கு முடிந்த பிறகு நடிகர்-நடிகைகள் சம்பளத்தை 50 சதவீதம் குறைத்துக்கொள்ள வேண்டும். ஊரடங்கு முடிந்ததும் தயாரிப்பாளர்கள் சங்கம் இதுகுறித்து ஆலோசிக்கும்” என்றார்.

மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால். திலீப், பிரித்விராஜ், நிவின் பாலி, துல்கர் சல்மான், மஞ்சு வாரியர், பார்வதி மேனன், ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட சிலர் அதிக சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

Next Story