தேசிய நாடக குழுவில் சேருவதற்கு ரூ.300 இல்லாமல் கூட கஷ்டபட்டேன் - மறைந்த நடிகர் இர்பான்கான்


தேசிய நாடக குழுவில் சேருவதற்கு ரூ.300 இல்லாமல் கூட கஷ்டபட்டேன் - மறைந்த நடிகர் இர்பான்கான்
x
தினத்தந்தி 29 April 2020 12:20 PM GMT (Updated: 29 April 2020 12:20 PM GMT)

தேசிய நாடக குழுவில் சேருவதற்கு ரூ.300 இல்லாமல் கூட கஷ்டபட்டேன் என மறைந்த நடிகர் இர்பான்கான் கூறி இருந்தார்.

மும்பை,

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் இர்பான்கான். பெருங்குடல் நோய் தொற்று காரணமாக மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்த அவர், இன்று திடீரென மரணமடைந்த சம்பவம் திரைத்துறையினருக்கு பேரதிர்ச்சியை அளித்தது.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் அமிதாபச்சன், அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இர்பானின் மறைவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இர்பான் கானின் மறைவு சினிமா மற்றும் நாடக உலகிற்கு பேரிழப்பு. அவரது தனித்துவ நடிப்பால் என்றும் நினைவுகூறப்படுவார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அபிமானிகளுக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என கூறியுள்ளார்.

இந்தநிலையில், மறைந்த இர்பான்கான் 2014-ம் ஆண்டு டெலிகிராப் இந்தியா நாளிதழக்கு அளித்த பேட்டியில் தம் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை பகிர்ந்துள்ளார். இப்போது அந்தப் பேட்டிகள் வைரலாகி வருகின்றன.

நான் கிரிக்கெட் நன்றாக விளையாடுவேன். நான் ஒரு கிரிக்கெட் வீரராகவே ஆசைப்பட்டேன். ஜெய்பூர் அணியின் இளம் ஆல்ரவுண்டராக திகழ்ந்தேன். சி.கே. நாயுடு கிரிக்கெட் போட்டிக்கு நான் தேர்வாகினேன். ஆனால் போட்டிக்கு செல்ல பணம் தேவைப்பட்டது. யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை. அப்போது என்னால் ஒரு 600 ரூபாய் கூட திரட்ட முடியவில்லை. அப்போது முடிவெடுத்தேன் கிரிக்கெட்டை என்னால் தொடர முடியாது என்று கூறினார்.

மேலும் அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில்,

மிகவும் பெருமை வாய்ந்த தேசிய நாடகக் குழு பள்ளியில் சேர்வதற்காக ரூ.300 தேவைப்பட்டது, அதுவும் அப்போது என்னிடம் இல்லை. அப்போது என்னுடைய சகோதரி எனக்கு பணம் கொடுத்து உதவி செய்தார்.

கிரிக்கெட்டை கைவிடுவது என்பது உணர்ச்சிவசப்பட்ட முடிவல்ல நன்றாக யோதித்தே முடிவு எடுத்தேன். எப்படி இருந்தாலும் நாட்டுக்காக 11 பேர் தானே விளையாட முடியும், ஆனால் நடிகர் ஆகிவிட்டால் காலம் முழுவதும் நடிக்கலாமே என்ற எண்ணமும் ஓர் காரணமாக அமைந்தது. அதுவும் இப்போது வந்திருக்கும் டி20 கிரிக்கெட் எனக்கு வெறுப்பையே ஏற்படுத்துகிறது.

இவ்வாறு இர்பான்கான் தெரிவித்திருந்தார்.

மறைந்த இர்பான்கான் 2011-ல் பான் சிங் தோமர் என்கிற தடகள மற்றும் இந்திய ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்தார்.  சிறந்த படம் என்கிற தேசிய விருதை மட்டுமல்லாமல் இர்பான்கானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. மத்திய அரசு 2011-ல் இர்பான்கானுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

2013-ல் லஞ்ச் பாக்ஸ் என்கிற இந்திப் படம் இர்பான்கானுக்கு மேலும் புகழைச் சேர்ந்தது. பல சர்வதேச விருதுகளை வென்ற இந்தப் படம் வசூலிலும் சாதனை படைத்தது. 2017-ல் இர்பான்கான் நடித்து வெளியான இந்தி மீடியம், இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனாவிலும் வசூல் மழை பொழிந்தது. சாகேத் சவுத்ரி இயக்கிய இப்படத்தில் இர்பான்கான், சபா ஓமர், திஷிதா போன்றோர் நடித்திருந்தார்கள். இர்பான்கான் நடித்த இந்திப் படங்களில் அதிகம் வசூலித்தது, இந்தி மீடியம் தான் எனலாம்.

பாலிவுட்டையும் ஹாலிவுட்டையும் வென்ற இந்திய நடிகர் என்கிற அடையாளம் எப்போதும் இர்பான்கானுக்கு  உண்டு.

Next Story