கொரோனாவுக்கு அமெரிக்க பாப் பாடகர் பலி


கொரோனாவுக்கு அமெரிக்க பாப் பாடகர் பலி
x
தினத்தந்தி 30 April 2020 4:56 AM GMT (Updated: 30 April 2020 4:56 AM GMT)

கொரோனாவுக்கு அமெரிக்க பாப் பாடகர் டிராய் ஸ்னீட் பலியாகி உள்ளார்.

நியூயார்க்,

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி, மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்து வருகிறது. இந்த நோய்க்கு பிரபல அமெரிக்க பாப் பாடகர் டிராய் ஸ்னீட் பலியாகி உள்ளார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு காய்ச்சலும் சளியும் ஏற்பட்டது.

பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியானது. இதையடுத்து புளோரிடாவின் ஜாக்சன்விலே பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 52.

மரணம் அடைந்த டிராய் ஸ்னீட், ஹையர், தி ஸ்டரகில் இஸ் ஓவர், யூத் பார் கிறிஸ்ட் உள்பட பல இசை ஆல்பங்களை வெளியிட்டு உள்ளார். 1999-ல் வெளியிட்ட இசை ஆல்பத்துக்காக கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தி பிரீச்சர்ஸ் ஒய்ப் என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து இருக்கிறார்.

ஏற்கனவே ஹாலிவுட் நடிகர்கள் ஆண்ட்ரூ ஜாக், மார்க் ப்ளம், ஆலன் கார்பீல்டு, ஜப்பான் நடிகர் கென் ஷிமூரா, ஹாலிவுட் நடிகைகள் பேட்ரிசியா பாஸ்வொர்த், லீ பியர்ரோ, அமெரிக்க பாடகர்கள் ஜோ.டிப்பி, ஜான் பிரைன், இங்கிலாந்து நடிகர் டீம் புரூக், நடிகை ஹிலாரி ஹீத், நகைச்சுவை நடிகர் எட்டி லார்ஜ், ஒளிப்பதிவாளர் ஆலன் டாவ்யூ ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story