சினிமா செய்திகள்

வலிமை அப்டேட்: தயாரிப்பாளர் போனி கபூர் அறிக்கை + "||" + Producer Bonnie Kapoor reports valimai

வலிமை அப்டேட்: தயாரிப்பாளர் போனி கபூர் அறிக்கை

வலிமை அப்டேட்:  தயாரிப்பாளர் போனி கபூர் அறிக்கை
கொரோனா அச்சுறுத்தல் நிலவும் இந்த தருணத்தில் தாங்கள் தயாரிக்கும் படங்களின் தகவல்கள் எதையும் வெளியிட மாட்டோம் எனத் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித்தின் 60-வது படமாக ‘வலிமை’ உருவாகி வருகிறது. இந்தப் படத்தையும் போனி கபூரின் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்க எச்.வினோத் இயக்குகிறார். 

வலிமை’ படத்தில் அஜித்குமாருக்கு போலீஸ் அதிகாரி வேடம். இதற்காக உடற்பயிற்சிகள் மூலம் தோற்றத்தை இளமையாக மாற்றி இருக்கிறார்.

அஜித்துக்கு பிடித்தமான மோட்டார் சைக்கிள் மற்றும் கார் பந்தய காட்சிகளும் படத்தில் இடம் பெறுகின்றன. இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது லாக் டவுன் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகை விவரங்களை ரகசியமாக வைத்துள்ளனர்.

கதாநாயகியாக நடிக்க நயன்தாரா, தமன்னா, யாமி கவுதம் உள்ளிட்ட பல நடிகைகள் பெயர்கள் அடிபட்டன. இறுதியில் கியூமா குரோஷியை தேர்வு செய்து இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது. இவர் ஏற்கனவே ‘காலா’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து இருந்தார். இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லன்களாக 3 பிரபல நடிகர்கள் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தெலுங்கு கதாநாயகன் கார்த்திகேயாவை வில்லனாக தேர்வு செய்துவிட்டதாக பேசப்படுகிறது. இன்னும் 2 வில்லன் நடிகர்கள் தேர்வு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா.

இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனா என்கிற கொடிய நோயின் தாக்கத்தில் அகில உலகமே போராடிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்துக்கும் எந்தவிதமான விளம்பரமும் செய்யவேண்டாம் என எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரைக் கலந்து ஆலோசித்து ஒருமித்தக் கருத்தோடு முடிவெடுத்து உள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதுவரை தனித்து இருப்போம், நம் நலம் காப்போம் என்று கூறப்பட்டுள்ளது.