தூர்தர்ஷன் மறுஒளிபரப்பில் ராமாயணம் தொடர் சாதனை


தூர்தர்ஷன் மறுஒளிபரப்பில் ராமாயணம் தொடர் சாதனை
x
தினத்தந்தி 2 May 2020 4:53 AM GMT (Updated: 2 May 2020 4:53 AM GMT)

மறு ஒளிபரப்பிலும் ராமாயணம் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

சென்னை,

கொரோனா ஊரடங்கால் வீடுகளில் முடங்கி உள்ள மக்களின் பொழுது போக்குக்கு உதவியாக, தூர்தர்ஷனில் 1980-களில் ஒளிபரப்பாகி வரவேற்பை பெற்ற ராமானந்த் சாகரின் ராமாயணம் தொடர் மறு ஒளிபரப்பு செய்யப்படும் என்று மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார். அதன்படி இந்த தொடர் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி வருகிறது.

மறு ஒளிபரப்பிலும் ராமாயணம் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. முன்னணி நடிகைகள் பலர் இந்த தொடரை கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து பார்த்து வருவதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் ராமாயணம் தொடர், புதிய உலக சாதனை நிகழ்த்தி உள்ளது. உலக அளவில் அதிகமானோர் பார்த்த தொடர் என்ற சாதனையை ராமாயணம் தொடர் பெற்று இருக்கிறது. ஏப்ரல் 16-ந்தேதி ஒளிபரப்பான ராமாயணம் தொடரை 7.7 கோடி பேர் பார்த்துள்ளனர் என்றும், இது உலக சாதனை என்றும் தூர்தர்ஷன் தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது தெரிவித்து உள்ளது.

இந்த தொடரில் ராமராக அருண் கோவிலும், சீதையாக தீபிகா சிகாலியாவும், அனுமனாக தாரா சிங்கும் நடித்துள்ளனர். இந்த தொடர் அப்போதே தொலைக்காட்சி பார்வையாளர்களில் 82 சதவீதம் பேர் பார்த்து சாதனை படைத்தது.

Next Story