சிவாஜியுடன், கமல்ஹாசனின் அனுபவங்கள்
‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனுடனான அனுபவங்களை கமல்ஹாசன் பகிர்ந்து கொண்டார்.
சென்னை,
கமல்ஹாசன் நடித்து இயக்கும் ‘தலைவன் இருக்கின்றான்’ படம் தொடர்பாக அவரும், விஜய்சேதுபதியும் சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில், நேரலையில் பேசிக்கொண்டார்கள். அப்போது, ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனுடனான அனுபவங்களை கமல்ஹாசன் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:-
“சிவாஜியிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அவர் பயந்த சுபாவம் கொண்டவர். பணத்தை கையினால் தொட்டது இல்லை. அவர் நடித்த ஒரு படப்பிடிப்பில் நிறைய நாணயங்களை கொட்டி வைத்து படமாக்கியிருக்கிறார்கள். அப்போது அவர், “இதுதான் புது நாணயங்களா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டு இருக்கிறார்.
“ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு நாணயங்கள் எப்படி தெரியும்?” என்று சிலர் பேசிக்கொண்டார்கள். ஆனால், உண்மையிலேயே அவர் பணத்தை அதிகம் பார்த்ததில்லை. நானே அவருக்கு ‘அட்வான்ஸ்’ கொடுத்து இருக்கிறேன். அந்த பணத்தை அவர் கையினால் வாங்கவில்லை.
ஒருநாள் அவர் என்னிடம், “வெளிநாடுகளுக்கு எப்படி செல்கிறாய்?” என்று கேட்டார். “டிக்கெட் எடுத்து விமானம் மூலம் செல்கிறேன்” என்று சொன்னேன். “நீயே டிக்கெட் எடுத்து தனியாக சென்று வருவாயா?” என்று கேட்டார். “ஆமாம்” என்றேன்.
“என்னை தனியாக விமான நிலையத்தில் விட்டால், அழுது விடுவேன்” என்று அவர் சொன்னார். தனக்கு தனியாக வெளிநாடு செல்ல தெரியாது என்றார்.”
இவ்வாறு சிவாஜியுடனான அனுபவங்களை விஜய்சேதுபதியிடம், கமல்ஹாசன் பகிர்ந்து கொண்டார்.
Related Tags :
Next Story