கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.15000 கொடுத்த மனிதர் நான் அல்ல: அமீர்கான் விளக்கம்


கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.15000 கொடுத்த மனிதர் நான் அல்ல: அமீர்கான் விளக்கம்
x
தினத்தந்தி 4 May 2020 7:07 AM GMT (Updated: 4 May 2020 7:07 AM GMT)

கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டோருக்கு ஒரு கிலோ கோதுமைக்குள் ரூ.15 ஆயிரம் வழங்கிய நபர் நான் அல்ல என்று நடிகர் அமீர்கான் விளக்கம் அளித்துள்ளார்.

மும்பை,

கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டோருக்கு சல்மான்கான், ஷாருக்கான், அக்‌ஷய்குமார், கங்கனா ரணாவத், வித்யாபாலன் உளிட்ட பல இந்தி நடிகர்-நடிகைகள் உதவி வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த வாரம்  நடிகர் அமீர்கான் நூதனமான முறையில் ஏழைகளுக்கு தலா ஒரு கிலோ கோதுமை பாக்கெட்டுகள் வழங்கப்படும் என்று அறிவித்ததாக கூறப்படுகிறது. அதனை பலரும் குறைவாக மதிப்பிட்டு வாங்க செல்லவில்லை. ஆனால் அதற்கும் வழியில்லாத பரம ஏழைகள் கோதுமை பாக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர். வீட்டுக்கு சென்று குழந்தைகளுக்கு சப்பாத்தி போடுவதற்காக பொட்டலத்தை திறந்தவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. கோதுமை பாக்கெட்டுக்கு உள்ளே ரூ.15 ஆயிரம் இருந்ததை பார்த்து சந்தோஷப்பட்டனர். ஒரு கிலோ கோதுமை பாக்கெட் என்றால் உண்மையான ஏழைகள் மட்டுமே வாங்க வருவார்கள் என்று முடிவு செய்து நூதன முறையில் உதவி செய்து இருப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் அவரை பாராட்டினர்.

இந்நிலையில், அதற்கு தற்போது அமீர்கான் டுவிட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

"நண்பர்களே, கோதுமை பாக்கெட்டுக்குள் பணம் வைத்துக் கொடுக்கும் மனிதர் நான் அல்ல. அது முற்றிலும் ஒரு போலியான கதை. அந்த ராபின் ஹுட் தன்னை வெளிப்படுத்தக் கூடாது என விருப்பப்பட்டிருப்பார். பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் இது போன்ற பல கதைகள் வாட்ஸ் அப்பில் உலா வந்து கொண்டிருக்கின்றன. பலரும் அதை உண்மை என நம்பி அப்படியே சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

Next Story