கொரோனா சிகிச்சைக்கு ராகவேந்திரா மண்டபத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் - ரஜினி தரப்பில் கூறியதாக தகவல்
நடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என ரஜினி தரப்பில் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை,
கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து நாளுக்கு நாள் முதன்மை கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை அளிக்க பலரும் தங்கள் கட்டிடங்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், தே.மு.தி.க, வைரமுத்து தங்கள் கட்சி அலுவலகங்கள், அரங்குகளை பயன்படுத்திக்கொள்ள அனுமதி கடிதம் வழங்கினர்.
தற்போது சென்னை மாநகராட்சி, சென்னையிலுள்ள மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை நிலவுவதால் திருமண மண்டபங்கள், பள்ளி, கல்லூரிகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் ஒரு மாதத்தில் 50 ஆயிரம் படுக்கைகளை தயார் செய்துவிடுவோம் என்றும் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதாகவும் அங்கு எந்த நிகழ்ச்சியும் 3 மாதத்துக்கு நடக்காது என்று லதா ரஜினிகாந்த் தெரிவித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், ராகவேந்திரா மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கொடுக்க முடியாது என்று சொன்னதாக வெளியாகி வரும் தகவல்கள் எல்லாம் வதந்தி என்றும் ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபம் எப்போது வேண்டுமானாலும் தேவைப்படும் என்பதால் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி சார்பில் ரஜினிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story