சினிமா செய்திகள்

‘வாட்ஸ்-அப்’பில் அவதூறு புகார் நடிகர் மீது நடிகை ரஞ்சனி வழக்கு? + "||" + Actress Ranjani sues actor for alleged defamation

‘வாட்ஸ்-அப்’பில் அவதூறு புகார் நடிகர் மீது நடிகை ரஞ்சனி வழக்கு?

‘வாட்ஸ்-அப்’பில் அவதூறு புகார் நடிகர் மீது நடிகை ரஞ்சனி வழக்கு?
‘வாட்ஸ்-அப்’பில் அவதூறு புகார் தொடர்பாக நடிகர் மீது நடிகை ரஞ்சனி வழக்கு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை,

பிரபல முன்னாள் கதாநாயகி ரஞ்சனி. இவர் பாரதிராஜா இயக்கிய ‘முதல் மரியாதை’ படத்தில் அறிமுகமானார். கடலோர கவிதைகள், ஆயிரம் பூக்கள் மலரட்டும், மண்ணுக்குள் வைரம், முத்துக்கள் மூன்று, உரிமை கீதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

திருமணத்துக்கு பிறகு கேரளாவில் வசிக்கும் ரஞ்சனி, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினராக உள்ளார். இந்த உறுப்பினர்களுக்கென்று பிரத்யேகமான ‘வாட்ஸ்-அப்’ குரூப் உள்ளது. நடிகர்கள் நாசர், கார்த்தி, விஷால், மனோபாலா, ரஞ்சனி, குட்டி பத்மினி உள்பட பலர் இந்த குரூப்பில் உள்ளனர். இதில் நடிகர் சங்கம் தொடர்பான தகவல்கள் பதிவிடப்பட்டு வந்தன. தற்போது கொரோனா தொடர்பான விஷயங்களை பதிவிட்டனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலையை சேர்ந்த நாடக நடிகரான வாசுதேவனுக்கும் ரஞ்சனிக்கும் இடையே இந்த ‘வாட்ஸ்-அப்’ குழுவில் மோதல் நடந்துள்ளது. வாசுதேவன் தன்னை பற்றி அவதூறான வார்த்தையை பயன்படுத்தியதாக ரஞ்சனி குற்றம் சாட்டியுள்ளார். அவரை கண்டித்தார். மேலும் சில நடிகர்கள் ரஞ்சனிக்கு ஆதரவாக பேசினர்.

இதற்கு விளக்கம் அளித்த வாசுதேவன், “நீங்கள் சினிமா நடிகை, நான் நாடக நடிகர். இருவர் தொழிலும் வேறு என்ற அர்த்தத்தில்தான் பேசினேன்” என்று கூறினார். இதனை ரஞ்சனி ஏற்கவில்லை. அவர் மீது வழக்கு தொடரப்போவதாக கூறியுள்ளார். வாசுதேவனும், ரஞ்சனி தன்னை அவதூறாக பேசியதாக போலீசில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.