பிரபல கொலம்பிய நடிகர் அன்டோனியோ பொலிவர் கொரோனாவால் உயிரிழப்பு


பிரபல கொலம்பிய நடிகர் அன்டோனியோ பொலிவர் கொரோனாவால் உயிரிழப்பு
x
தினத்தந்தி 7 May 2020 5:51 AM GMT (Updated: 7 May 2020 5:51 AM GMT)

பிரபல கொலம்பிய நடிகர் அன்டோனியோ பொலிவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளார்.

லெட்டிசியா,

உலகெங்கும், கொரோனா வைரஸ் பாதிப்பு  எண்ணிக்கை, 37.40 லட்சத்தை தாண்டியுள்ளது. அதில், 2.58 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும், 12.37 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 72 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகின் வல்லரசு நாடு அமெரிக்கா, தற்போது கொரோனா வைரசின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. 

இந்தநிலையில், இந்த கொரோனா வைரஸ் பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. இந்த தொற்று பல ஹாலிவுட் நடிகர்களின் உயிர்களையும் காவு வாங்கி இருக்கிறது. இந்நிலையில் பிரபல கொலம்பிய நடிகர் அன்டோனியோ பொலிவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியாகியுள்ளார். 

இவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டதை அடுத்து தெற்கு கொலம்பியா பகுதியில் உள்ள லெட்டிசியா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 1 ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்கு வயது 72. இதையடுத்து திரையுலகினர் அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவர் சிரோ குர்ரா (Ciro Guerra) இயக்கிய எம்ப்ராஸ் ஆப் த செர்பன்ட் என்ற கொலம்பிய படத்தில், முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பு அதில் பேசப்பட்டது.

இந்த படம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரையிலும் இருந்தது. சிரோ குர்ரா இயக்கி நெட்பிளிக்ஸில் வெளியான கிரீன் பிரண்டீயர் என்ற வெப் தொடரிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story