சர்ச்சை பேச்சு நடிகை ஸ்ரீமுகி மீது வழக்கு


சர்ச்சை பேச்சு நடிகை ஸ்ரீமுகி மீது வழக்கு
x
தினத்தந்தி 8 May 2020 10:08 AM IST (Updated: 8 May 2020 10:08 AM IST)
t-max-icont-min-icon

குறிப்பிட்ட சமுதாயத்தினரை ஸ்ரீமுகி இழிவுபடுத்தி பேசியதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழில் எட்டுத்திக்கும் மதயானை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரீமுகி. தெலுங்கில் நேனு சைலஜா, சாவித்ரி, ஜென்டில்மேன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார்.

ஸ்ரீமுகி 2 வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசும்போது குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றி சர்ச்சை கருத்தை கூறியதாக தற்போது எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஸ்ரீமுகி மீது வித்யாநகரை சேர்ந்த வெங்கடராமா என்பவர் போலீசில் புகார் அளித்தார். குறிப்பிட்ட சமுதாயத்தினரை ஸ்ரீமுகி இழிவுபடுத்தி பேசியதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் கூறியுள்ளார்.

இதையடுத்து ஸ்ரீமுகி மீது பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் பேசிய வீடியோவை ஆய்வு செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஸ்ரீமுகி கூறும்போது, “2 ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான நிகழ்ச்சிக்கு இப்போது ஏன் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்று புரியவில்லை. நான் யார் மனதையோ அல்லது எந்தவொரு சமுதாயத்தையோ காயப்படுத்துவதுபோல் பேசி இருந்தால் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்” என்றார்.

Next Story