பெண்களை வேலைக்காரி மாதிரி நடத்தக்கூடாது விடிவி கணேஷிடம் கூறிய சிம்பு!


பெண்களை வேலைக்காரி மாதிரி நடத்தக்கூடாது விடிவி கணேஷிடம் கூறிய சிம்பு!
x
தினத்தந்தி 15 May 2020 2:29 PM IST (Updated: 15 May 2020 2:29 PM IST)
t-max-icont-min-icon

பெண்களை வேலைக்காரி மாதிரி நடத்தக்கூடாது என விடிவி கணேஷிடம் நடிகர் சிம்பு கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ் திரையுலகை சேர்ந்த பெரும்பாலான நடிகைகளுக்கு சமையல் நன்றாக தெரியும். பழம்பெரும் கதாநாயகியான சவுகார் ஜானகி, சமையல் கலையில் தேர்ந்தவர். அவரை, ‘சமையல் ராணி’ என்றே அழைப்பார்கள். இவருக்கு ஓட்டல் நடத்திய அனுபவமும் உண்டு. இவரைப்போல் ராதிகா சரத்குமார், குஷ்பு, சுஹாசினி, மீனா, ரோஜா, ரேகா ஆகியோரும் சமையல் தெரிந்த நாயகிகள்.

சமையல் என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் நடிகைகளும் இருக்கிறார்கள். சாப்பாட்டுக்கு கூட, சமையலறை பக்கம் ஒதுங்காத அந்த நடிகைகள், ‘கொரோனா மற்றும் ஊரடங்கு புண்ணியத்தில் சமையல் கற்றுக்கொண்டார்கள்’.

அவர்களில் ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா, காஜல் அகர்வால், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முக்கியமானவர்கள். நடிகர்களில் சமையல் கலையில் தேர்ந்தவர், அஜித்குமார் என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல். அவரை, ‘நள மகாராஜா’ என்று நெருங்கிய நண்பர்கள் அழைப்பார்கள். அஜித் கையினால் சமைத்த பிரியாணியின் வாசனையையும், ருசியையும் அதை சாப்பிட்டவர்களால் மறக்க முடியாதாம். அத்தனை ருசி!. ஆர்யா, விஷால், சூரி ஆகிய மூன்று பேருக்கும் நன்றாகவே சமைக்க தெரியுமாம்.

இந்த பட்டியலில் புதுசாக சேர்ந்திருப்பவர், சிம்பு!. இவருக்கு ருசியாக சமைக்க வருமாம். ஊரடங்கு விடுமுறையில் இவர் அப்பா டி.ராஜேந்தருக்கும், அம்மா உஷா ராஜேந்தருக்கும் விதவிதமாக, வகை வகையாக சமைத்துப் போட்டு இருக்கிறார். “சைவம் மற்றும் அசைவம் இரண்டையும் மிக ருசியாக சமைப்பதில் தேர்ந்தவர், சிம்பு.

இந்தநிலையில், சிம்புவுடன் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் விடிவி கணேஷ். தயாரிப்பாளர் மற்றும் நடிகராக வலம் வரும் இவர் லாக் டவுனில் இருவரும் இணைந்து எடுத்த வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.

அதில், சிம்பு, சமையல் செய்து கொண்டே விடிவி கணேஷ் உடன் உரையாடுகிறார். அப்போது, வரப்போற பொண்ணுக்கு வேலையே இல்லாம பண்ணிடுவிங்க போல இருக்கே என்று விடிவி கணேஷ் கேட்க, என்னை கல்யாணம் செய்து கொண்டு வரும் பெண் வேலை செய்வதற்கா வராங்க. அவங்க என்ன வேலைக்காரங்கனு நினைச்சீங்களா, அதெல்லாம் உங்க காலம் என்று பதில் கூறுகிறார்.

மேலும் சிம்பு பேசும் போது, பெண்களை வேலைக்காரி மாதிரி நடத்தக்கூடாது. அவர்கள் விரும்பினால் சமையல் செய்யலாம். என் மனைவிக்காக சமையல் செய்வேன். எப்போதும் சந்தோஷமாக  இருக்க வேண்டும் என்று தான் நினைப்பேன் என்றும் நான் உங்களை மாதிரி அல்ல என்றும் விடிவி கணேஷிடம் கூறுகிறார்.இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

வருங்கால மனைவிக்கு ஆதரவாக சிம்பு பேசியிருப்பதற்கு ரசிகர்களும் திரையுலகினரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். சிம்புவின் மனைவியைப் பார்க்கவேண்டும் போல் உள்ளது என நடிகை பிந்து மாதவி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். இதுதவிர ஊரடங்கு காலத்தில் சிம்பு தனது வீட்டில் சமையல் செய்யும் மற்றொரு விடியோவும் வெளியாகியுள்ளது.

Next Story