எதிர்ப்பை மீறி இணையத்தில் வருகிறது ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் படங்கள் ரிலீஸ் தேதி


எதிர்ப்பை மீறி இணையத்தில் வருகிறது ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் படங்கள் ரிலீஸ் தேதி
x
தினத்தந்தி 16 May 2020 10:08 AM IST (Updated: 16 May 2020 10:08 AM IST)
t-max-icont-min-icon

ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேசின் ‘பெண்குயின்’ ஆகிய படங்களை தியேட்டர்களுக்கு பதிலாக இணையதளங்களில் நேரடியாக ரிலீஸ் செய்கின்றனர்.

சென்னை,

கொரோனா ஊரடங்கினால் திரையுலகம் முடங்கி உள்ளது. இந்த அச்சுறுத்தல் ஓய்ந்து தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேசின் ‘பெண்குயின்’ ஆகிய படங்களை தியேட்டர்களுக்கு பதிலாக இணையதளங்களில் நேரடியாக ரிலீஸ் செய்கின்றனர்.

இரு படங்களின் ரிலீஸ் தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளன. பொன்மகள் வந்தாள் படம் வருகிற 29-ந்தேதியும், பெண்குயின் படம் அடுத்த மாதம் 19-ந்தேதியும் இணையதளத்தில் வெளியாகிறது. திரைப்படங்களை டிஜிட்டல் தளத்தில் வெளியிட தியேட்டர் அதிபர்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி இந்த இரண்டு படங்களையும் டிஜிட்டல் தளத்துக்கு விற்றுள்ளனர். 2 பெரிய நடிகைகளின் படங்கள் தியேட்டர்களில் திரையிடப்படாமல் நேரடியாக இணையதளத்தில் ரிலீசாவதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த படங்களுக்கு வரவேற்பு இருந்தால் மேலும் பல படங்கள் இணையதளத்துக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொன்மகள் வந்தாள் படத்தில் ஜோதிகா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜே.ஜே. பிரடரிக் இயக்கி உள்ளார்.

பெண்குயின் படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணியாக நடித்துள்ளார். பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார். ஈஸ்வர் கார்த்திக் இயக்கி உள்ளார்.

திரிஷாவின் பரமபதம் விளையாட்டு, சந்தானத்தின் சர்வர் சுந்தரம் படங்களையும் டிஜிட்டலில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடப்பதாக கூறப்படுகிறது.

Next Story