பாக்யராஜ் திரைக்கதை, வசனத்தில் முந்தானை முடிச்சு ‘ரீமேக்’கில் சசிகுமார்


பாக்யராஜ் திரைக்கதை, வசனத்தில் முந்தானை முடிச்சு ‘ரீமேக்’கில் சசிகுமார்
x
தினத்தந்தி 21 May 2020 1:20 AM GMT (Updated: 21 May 2020 1:20 AM GMT)

பாக்யராஜ் திரைக்கதை, வசனத்தில் முந்தானை முடிச்சு ‘ரீமேக்’கில் சசிகுமார் நடிக்க உள்ளார்.


பாக்யராஜின் சுவரில்லாத சித்திரங்கள், மவுன கீதங்கள், அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு போச்சு, டார்லிங் டார்லிங் உள்ளிட்ட வெற்றி படங்கள் வரிசையில் வசூல் சாதனை நிகழ்த்திய படம் முந்தானை முடிச்சு.

பாக்யராஜ் இயக்கி, கதாநாயகனாக நடித்து இருந்தார். இந்த படம் 1983-ல் திரைக்கு வந்தது. ஊர்வசி கதாநாயகியாக வந்தார். தீபா, நளினிகாந்த், கோவை சரளா உள்ளிட்ட மேலும் பலர் நடித்து இருந்தனர். ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்து இருந்தது. இளையராஜா இசையில் படத்தில் இடம்பெற்ற ‘அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்’, ‘சின்னஞ்சிறு கிளியே’, ‘கண்ண தொறக்கனும் சாமி’, ‘நான் புடிக்கும் மாப்பிளைதான்’, ‘வா வா வாத்தியாரே வா’, ‘விளக்கு வைச்ச நேரத்திலே’ ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. இந்த படம் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் ரீமேக் ஆகி வசூலை குவித்தது.

36 வருடங்களுக்கு பிறகு தற்போது முந்தானை முடிச்சு படம் தமிழிலேயே ரீமேக் ஆக உள்ளது. இதில் கதாநாயகனாக சசிகுமார் நடிக்கிறார். பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். படத்தை இளம் இயக்குனர் பாலாஜி டைரக்டு செய்கிறார். இந்த படத்தை ஜே. எஸ்.பி. சதீஷ் தயாரிக்கிறார். கொரோனா ஊரடங்கு முடிந்ததும் இதர நடிகர்-நடிகை தேர்வு மற்றும் படப்பிடிப்புக்கான பணிகள் தொடங்குகின்றன. இன்றைய காலத்துக்கு ஏற்ப கதையில் சில மாற்றங்கள் செய்துள்ளனர்.

Next Story