பட அதிபர் சங்க தேர்தல் விஷால் மீண்டும் போட்டியா?


பட அதிபர் சங்க தேர்தல் விஷால் மீண்டும் போட்டியா?
x
தினத்தந்தி 26 May 2020 4:42 AM GMT (Updated: 26 May 2020 4:42 AM GMT)

பட அதிபர் சங்க தேர்தலில் விஷால் மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பொறுப்பில் இருந்த நடிகர் விஷாலுக்கு எதிராக அதிருப்தியாளர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினர். சங்க அலுவகத்துக்கு பூட்டு போட்ட சம்பவமும் பரபரப்பானது. இதையடுத்து சங்கத்தை தனி அதிகாரி கட்டுப்பாட்டின் கீழ் அரசு கொண்டு வந்தது. தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஜூன் 30-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.

இந்த தேர்தலில் டி.சிவா, தேனாண்டாள் முரளி ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்தனர். மேலும் சிலர் போட்டிக்கு தயாரான நிலையில் கொரோனா ஊரடங்கினால் தேர்தலை தள்ளி வைக்கும்படி சிலர் கோர்ட்டை அணுகினர். இதையடுத்து தேர்தலை செப்டம்பர் 30-ந்தேதிக்குள் நடத்தி முடிக்கும்படி தனி அதிகாரிக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே கொரோனா ஊரடங்கு முடிந்ததும் தேர்தல் பணிகள் மீண்டும் தீவிரமாக உள்ளன. இந்த தலைவர் பதவிக்கு பாரதிராஜா, எஸ்,தாணு ஆகியோரும் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில் நடிகர் விஷாலிடம் அவரது ஆதரவாளர்கள் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள். விஷால் தற்போது சக்ரா படத்தின் டப்பிங், எடிட்டிங் பணிகளில் இருப்பதாகவும் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பது பற்றிய தனது முடிவை அறிவிப்பார் என்றும் நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.


Next Story