5000 ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கிய சல்மான் கான்


5000 ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கிய சல்மான் கான்
x
தினத்தந்தி 26 May 2020 12:23 PM GMT (Updated: 26 May 2020 12:23 PM GMT)

நடிகர் சல்மான்கான் ரமலான் பண்டிகையையொட்டி 5000 ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் கொண்ட பையை வழங்கி உள்ளார்.

மும்பை,

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நோய் பரவாமல் தடுக்க வருகிற மே 31 தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் அரசுக்கு பல்வேறு பிரபலங்களும் உதவி செய்து வருகின்றனர். அரசு அறிவித்துள்ள சலுகைகளையும் தாண்டி சில தொண்டு நிறுவனங்களும் முன் வந்து ஏழை எளியோருக்கு உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா வைரஸால் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கிட்களை நடிகர் சல்மான்கான் விநியோகித்து வருகிறார். அந்தவகையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு 5000 ஏழைக் குடும்பங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை  நடிகர் சல்மான் கான் வழங்கி உள்ளார்.

ரமலான் பண்டிகைக்காகச் செய்யப்படும் ஷீர் குருமாவுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் அடங்கிய பையை 5000 ஏழைக் குடும்பங்களுக்கு அவர் வழங்கியுள்ளார். “பீயிங் ஹேங்ரி” என்கிற திட்டத்தின் மூலமாக இந்த உதவிகளை செய்துள்ளார்.

மேலும் மும்பை நகரில் யார் யாருக்கெல்லாம் உணவுப் பொருள்கள் தேவைப்படுகிறதோ அனைவருக்கும் வழங்க வேண்டும் என உணவுப் பொருள்களை எடுத்துச் செல்லும் டிரக்கின் ஓட்டுநர்களுக்கு சல்மான் அறிவுறித்தியுள்ளார்.

 ஊரடங்கால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக அன்னதானம் சவால் என்கிற முன்னெடுப்பின் மூலம் இந்தக் காரியங்களை அவர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story