70 நாட்களுக்கு பிறகு சின்னத்திரை தொடர்கள் படப்பிடிப்பு தொடங்கின - நடிகை குஷ்பு மகிழ்ச்சி
70 நாட்களுக்கு பிறகு சின்னத்திரை தொடர்கள் படப்பிடிப்பு தொடங்கி உள்ளன. இதற்கு நடிகை குஷ்பு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கினால் திரையுலகம் முடங்கி உள்ளது. அரசு ஊரடங்கை தளர்த்தி முக்கிய தொழில் துறைகள் செயல்பட அனுமதி அளித்து உள்ளது. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை தொடர்கள் படப்பிடிப்புக்கும் அனுமதி அளித்து இருக்கிறது . படப்படிப்பில் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் 60 பேரை படப்பிடிப்பில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் நிபந்தனை விதித்து உள்ளது. இதையடுத்து சின்னத்திரை படப்பிடிப்புகள் சென்னையில் நேற்று தொடங்கின. அன்புடன் குஷி, ஈரமான ரோஜாவே, தேன்மொழி பி.ஏ, பாரதி கண்ணம்மா, நாம் இருவர் நமக்கு இருவர், செந்தூரப்பூவே, சுந்தரி நீயும் சுந்தரன் நானும், அரண்மனை கிளி, பாக்கிய லட்சுமி, யாரடி நீ மோகினி, ராஜா மகள், இரட்டை ரோஜா, கோகுலத்தில் சீதை, நீதானே என் பொன்வசந்தம் உள்பட 28 தொலைக்காட்சி தொடர்கள் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
அம்மன், ஓவியா, பொன்மகள் வந்தாள், ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, இதயத்தை திருடாதே ஆகிய 5 தொடர்களின் படப்பிடிப்புகள் சென்னையில் நேற்று நடந்தன. இந்த படப்பிடிப்புகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன. நடிகர்- நடிகைகள் தவிர படக்குழுவினர் முக கவசம் அணிந்து இருந்தனர். பெப்சி நிர்வாகிகள் ஆர்.கே. செல்வமணி, அங்கமுத்து சண்முகம், சாமிநாதன், ஸ்ரீதர் ஆகியோர் நேரில் சென்று அரசின் விதிமுறைப்படி படப்பிடிப்புகள் நடக்கிறதா என்று ஆய்வு செய்தார்கள். நடிகை குஷ்பு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “ஊரடங்கால் 70 நாள் இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்பை தொடங்குகிறோம். தினக்கூலி தொழிலாளர்களின் முகத்தில் புன்னகையை காண்கிறோம். படப்பிடிப்பு தளங்களில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். நீங்கள் விரும்பும் நிகழ்ச்சிகள் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளன“ என்று குறிப்பிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story