சினிமா செய்திகள்

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம்: சினிமாத்துறை பிரபலங்கள் கருத்து + "||" + Justice For Jeyaraj And Fenix Cinema celebrities comment

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம்: சினிமாத்துறை பிரபலங்கள் கருத்து

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம்: சினிமாத்துறை பிரபலங்கள் கருத்து
உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்ஸிற்கு நீதி கிடைக்க வேண்டும் என சினிமாத்துறை பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.
சென்னை 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசரடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 55). இவருடைய மகன் பென்னிக்ஸ் (31). இவர்கள் சாத்தான்குளம் மெயின்பஜாரில் செல்போன் கடை நடத்தி வந்தனர். சம்பவத்தன்று இரவு ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்திருந்த விவகாரத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் போலீசார் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர் 2 பேரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 22-ந் தேதி இரவு பென்னிக்சுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். ஜெயராஜூம் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, மறுநாள் பலியானார்.

அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டன. மதுரை ஐகோாட்டு உத்தரவின்படி நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் பிரேத பரிசோதனை தொடங்கியது. முதலில் பென்னிக்ஸ் உடலும், அதன்பிறகு ஜெயராஜ் உடலும் அடுத்தடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. இது வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

இரவு 11.30 மணியளவில் பிரேத பரிசோதனை முடிந்தது. அதுவரை ஜெயராஜ் உறவினர்கள், அந்த ஊரை சேர்ந்தவர்கள் காத்து இருந்தனர். பின்னர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யும் வரை உடல்களை வாங்க மாட்டோம் என்று கூறிவிட்டு அவர்கள் சென்றனர்.

இதையடுத்து நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் நேற்று 2-வது நாளாக விசாரணை நடத்தினார். காலையில் ஜெயராஜ் மனைவி செல்வராணி, மகள்கள் பெர்சி, பியூலா, அபிஷா மற்றும் உறவினர்கள் வந்தனர். அவர்களுடன் வக்கீல்களும் வந்தனர். அவர்களிடம் காலையில் தொடங்கிய விசாரணை மாலை வரை நடந்தது.பின்னர் அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில், உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்சிற்கு நீதி கிடைக்க வேண்டும் என சினிமாத்துறை பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். டுவிட்டரில் "Justice For Jeyaraj And Fenix" என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.

ஆனால், அவர்கள் உடல்நலக் குறைவின் காரணமாக இறந்ததாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நடிகையும், அரசியல் பிரமுகருமான குஷ்பூ அவருடைய ட்விட்டர் பக்கத்தில், ''எந்தவித தாமதமும் இன்றி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் மரணத்திற்கு சட்டத்தின் அடிப்படையில் நீதி கிடைப்பதை நாம் காண முடியுமா? குற்றவாளிகள் தப்பி விடக் கூடாது. தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்பட்ட நீதியே'' என பதிவிட்டிருக்கிறார்.

இசையமைப்பாளர் டி.இமான், ''அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதல்களை கேட்பதற்கே அதிர்ச்சியாக உள்ளது. முழுக்க, முழுக்க மனிதத்தன்மையற்ற ஏற்றுக்கொள்ளவே முடியாத தாக்குதல் அவர்கள் மீது நடத்தப்பட்டுள்ளது. இந்த இரக்கமற்ற நடைமுறைக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் இந்தியாவின் ஜார்ஜ் ஃபிளாய்ட்'' என அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
''சட்டத்திற்கு உட்படாதவர்கள் யாருமில்லை. இந்த மனிதத்தன்மையற்ற செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும்'' என நடிகர் ஜெயம்ரவி பதிவிட்டிருக்கிறார்.

நடிகர் சாந்தணு அவருடைய டுவிட்டர் பக்கத்தில், ''ஜார்ஜ் ஃபிளாய்டுக்கு நடந்தது அநீதி என்றால் தூத்துக்குடியில் இன்றைக்கு நம்ம ஆளு ஒருத்தருக்கும் இதே நடந்திருக்கிறது'' எனப் பதிவிட்டிருக்கிறார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், ''சாத்தான்குளத்தில் நடந்தது கொடூரமானது. மனிதநேயத்தை அவமதிக்கும் செயல். குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். அந்த ஏழை ஆத்மாக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். சில மனிதர்கள் வைரஸ்களை விட ஆபத்தானவர்கள்'' என பதிவிட்டுள்ளார்.

''நீதி மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட விரும்பும் நேர்மையான எந்த காவல்துறையினருக்கும் உரிய செயல் இது அல்ல. காவலர் சீருடையில் இருக்கும் காட்டுமிராண்டித்தனம் மற்றும் வக்கிர எண்ணம் கொண்ட சிலருடைய வேலை தான் இது'' என நடிகர் கவுதம் கார்த்திக் குறிப்பிட்டிருக்கிறார்.

இயக்குநர் பா. ரஞ்சித், ''பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்காமல், மிக கொடூரமாக நிகழ்த்தபட்டிருக்கும் சாத்தான்குளம் தந்தை, மகன் படுகொலைக்கு அவர்களின் உடல் நலக்குறைபாடு தான் காரணம் என்று அறிக்கை விடுத்து, படுகொலைக்கு காரணமான காவலர்களை காப்பதற்கு துணியும் தமிழக அரசே, நீங்கள் தான் மக்களின் அரசா?'' என எழுதியுள்ளார்.

நடிகை ஹன்சிகா , ' ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீதான மிருகத்தனம் மிக்க செயலை கேட்டு அதிர்ந்து போனேன். குற்றவாளிகள் தப்பிக்க கூடாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கிணங்க நீதி கிடைக்க வேண்டும்' என தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.