கூடுதல் மின்கட்டணம்: கடும் கோபத்தில் நடிகை டாப்சி


கூடுதல் மின்கட்டணம்: கடும் கோபத்தில் நடிகை டாப்சி
x
தினத்தந்தி 30 Jun 2020 12:12 AM GMT (Updated: 2020-06-30T05:42:06+05:30)

கொரோனா ஊரடங்கில் மின் கட்டணத்தை அநியாயத்துக்கு உயர்த்தி விட்டதாக திரையுலகை சேர்ந்தவர்கள் குறை கூறி வருகிறார்கள்.

ஏற்கனவே நடிகர் பிரசன்னா தனது வீட்டுக்கு அதிக மின்கட்டணம் வந்துள்ளதாக புகார் கூறினார். அதனை மின்சார வாரியம் மறுத்து விளக்கமும் அளித்தது. தொடர்ந்து நடிகை கார்த்திகா மும்பை மின்வாரியம் தனது வீட்டுக்கு ரூ.1 லட்சம் மின்கட்டணம் விதித்துள்ளதாக குறைகூறினார்.

தனது டுவிட்டர் பதிவில், “மும்பை மின் வாரியத்தில் என்னமாதிரி மோசடி நடக்கிறது? ஜூன் மாத மின் கட்டணம் மட்டும் ரூ.1 லட்சம். கொரோனா ஊரடங்கில் மின்சார மீட்டரை கணக்கிடாமல் தோராயமாக இந்த தொகையை மதிப்பீடு செய்துள்ளனர். மும்பையில் வசிக்கும் பலரிடம் இருந்து இதுபோன்ற புகார்களை நான் கேட்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இது பரபரப்பானது. இந்த நிலையில் நடிகை டாப்சியும் தனக்கு அதிக மின்கட்டணம் விதித்துள்ளதாக கோபத்தில் இருக்கிறார். இவர் தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி வந்தான் வென்றான், காஞ்சனா3, வைராஜா வை, கேம் ஓவர் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் பிரபல நடிகையாக இருக்கிறார். அவர் கூறும்போது, “எனது வீட்டுக்கு ரூ.36 ஆயிரம் மின் கட்டணம் விதித்துள்ளனர். ஊரடங்கு அமலில் இருக்கும் 3 மாதங்களாக நான் புதிதாக மின்சாதனங்களை வாங்கவோ பயன்படுத்தவோ இல்லை. அப்படி இருக்கும்போது இவ்வளவு மின் கட்டணம் எப்படி கணக்கிட்டனர் என்பது புரியவில்லை” என்று கூறியுள்ளார்.

Next Story