பாடகி ஜானகி உடல்நிலை வதந்தியை கண்டித்த எஸ்.பி.பி.


பாடகி ஜானகி உடல்நிலை வதந்தியை கண்டித்த எஸ்.பி.பி.
x
தினத்தந்தி 30 Jun 2020 12:34 AM GMT (Updated: 2020-06-30T06:04:24+05:30)

பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி உடல் நிலை குறித்து சமூக வலைத்தளத்தில் வதந்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இவர் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். 4 முறை தேசிய விருதுகள் பெற்றார். தற்போது ஐதராபாத்தில் வசித்து வருகிறார். ஜானகி உடல் நிலை குறித்து சமூக வலைத்தளத்தில் வதந்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர், நடிகைகள், பாடகர்கள் உள்ளிட்ட திரையுலகினர் தொலைபேசியில் தொடர்ப்பு கொண்டு விசாரித்தனர். இதற்கு பதில் அளித்து ஜானகி பேசியுள்ள ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் “எல்லோரும் போன் செய்து விசாரிக்கிறார்கள். எதற்காக இப்படி வதந்தி பரப்புகிறார்கள் என்று புரியவில்லை. இது முதல் முறை இல்லை. 6-வது முறை. வேண்டுமென்றே இந்த வதந்தியை பரப்புகின்றனர். இப்படி வதந்தி பரப்பாதீர்கள். இந்த மாதிரி செய்திகளை கேட்டால் சிலருக்கு உடல் நிலை பாதிக்கும். இந்த மாதிரி பொய் சொல்லி என்னை கொல்லாதீர்கள் என்று ஏற்கனவே திட்டினேன். மறுபடியும் இப்படி செய்கிறார்கள்” என்று பேசி உள்ளார்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள வீடியோவில் “சமூக வலைத்தளத்தில் ஜானகி உடல் நிலை பற்றி யாரோ பொய் தகவலை பரப்பி உள்ளார். என்ன முட்டாள்தனம், நான் ஜானகி அம்மாவிடம் பேசினேன். அவர் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார். ஒரு கலைஞரை ஆத்மார்த்தமாக நேசிக்கும் மக்களுக்கு இதுபோன்ற செய்திகள் மாரடைப்பை ஏற்படுத்தலாம். தயவு செய்து சமூக வலைத்தளத்தை நேர்மறையான விஷயங்களுக்கு பயன்படுத்துங்கள்” என்று பேசி உள்ளார்.

Next Story