புதிய சங்கம் வேண்டாம் ; தயாரிப்பாளர் சங்க தலைவராக, பாரதிராஜாவை போட்டியின்றி தேர்வு செய்ய தயார் - தயாரிப்பாளர்கள் கூட்டாக அறிவிப்பு


புதிய சங்கம் வேண்டாம் ; தயாரிப்பாளர் சங்க தலைவராக, பாரதிராஜாவை போட்டியின்றி தேர்வு செய்ய தயார் - தயாரிப்பாளர்கள் கூட்டாக அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Aug 2020 4:17 PM GMT (Updated: 6 Aug 2020 4:17 PM GMT)

புதிய சங்கம் வேண்டாம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக, பாரதிராஜாவை போட்டியின்றி தேர்வு செய்ய தயார் என, தயாரிப்பாளர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.

சென்னை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ஏற்கனவே விஷால் தலைவராக இருந்தார். அவர் பதவி காலம் முடிந்துள்ளது. சங்கத்துக்கு தேர்தல் நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்த நிலையில் கொரோனா ஊரடங்கினால் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இன்னொரு புதிய சங்கம் உருவாகி உள்ளது.

இந்த சங்கத்துக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்று பெயர் வைத்துள்ளனர். சங்கத்தின் தலைவராக பாரதிராஜாவை தேர்வு செய்துள்ளனர். துணைத் தலைவர்களாக எஸ்.ஆர்.பிரபு, தனஞ்செயன் ஆகியோரும் பொதுச்செயலாளராக டி.சிவாவும் பொருளாளராக தியாகராஜனும் இணை செயலாளர்களாக லலித்குமார், சுரேஷ் காமாட்சி ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில், தயாரிப்பாளர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தயாரிப்பாளர்கள், 'தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம்' என்ற பாரதிராஜா தொடங்கியுள்ள புதிய சங்கம், தமிழ் சினிமாவை பின்னுக்கு தள்ளிவிடும்.

புதிய சங்கத்தை கலைக்க வேண்டுமென வலியுறுத்திய அவர்கள், தயாரிப்பாளர்களுக்கு பாரதிராஜா வழிகாட்ட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். அப்போது பேசிய கலைப்புலி தாணு, பாரதிராஜா சமாதானத்திற்கு முன்வந்தால் மற்ற பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தி கொண்டு, தலைவர் பதவிக்கு அவரையே ஒருமனதாக தேர்ந்தெடுக்கவும் தயார் என்று பேசினார். 


Next Story